×

இலக்கை விரட்டுவது அத்தனை எளிதாக இல்லை...வில்லியம்சன் சொல்கிறார்

அபுதாபி: பெங்களூருக்கு எதிராக நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் இலக்கை விரட்டுவது அத்தனை எளிதாக இல்லை என்று சன்ரைசர்ஸ் வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்தார். அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில்  டாஸ் வென்ற  ஐதராபாத் முதலில் பந்துவீச... ஆர்சிபி தட்டுத்தடுமாறி  20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்தது. அந்த அணியின் டி வில்லியர்ஸ் 56, ஆரோன் பிஞ்ச் 32 ரன்  எடுத்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் ஹோல்டர் 3, நடராஜன் 2, நதீம் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் கடுமையாகப் போராடி 19.4 ஓவரில் 4விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து வென்று, 2வது குவாலிபயர் ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது. மணிஷ் பாண்டே 24 ரன், கேன் வில்லியம்சன்  50*, ஜேசன்  ஹோல்டர் 24* ரன் விளாசி வெற்றிக்கு உதவினர். பெங்களூர் அணியின் முகமது சிராஜ் 2, ஆடம் ஸம்பா, சாஹல்  தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ஐதராபாத் 5வது முறையாக எலிமினேட்டர் போட்டியில் விளையாடி  உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2013ம் ஆண்டு ராஜஸ்தானையும், 2016, 2017ம் ஆண்டுகளில் கொல்கத்தாவையும், 2018ல் டெல்லியையும்  எதிர்த்து விளையாடியது.  அவற்றில் 2016, 2020ல்  ஐதராபாத் வென்றது. ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட கேன் வில்லியம்சன், ‘இது கடினமாக ஆட்டம். தரமான பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடுவது எளிதாக இருக்காது. களமும் எதிர்பார்த்த நிலையில் இல்லாததால் இலக்கை விரட்டுவது  அத்தனை  எளிதாக இல்லை. உண்மையில் கடும் சவாலாக இருந்தது. ஹோல்டர் என்னை விட  ‘கூல்’ ஆக விளையாடுகிறார். அவர் களத்தில் இருந்தது உதவியாக இருந்தது. ஆல் ரவுண்டர் பாத்திரத்தை சிறப்பாக செய்யும் அவரை எனக்கு  பிடித்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியாக 4வது வெற்றியை  வசப்படுத்திய சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் கூறுகையில், ‘இப்போதைக்கு  பரவாயில்லை என்ற மனநிலையில் இருக்கிறேன்.  நடராஜன், ரஷீ்த் கான் இருவரும்  எங்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி  உள்ளனர். முதல் 5 ஓவர்களை  சந்தீப், ஹோல்டர் வீச வேண்டும் என்று விரும்புகிறோம். நடுவில் நடராஜன்,  ரஷீத்  வீச வேண்டும். ரஷீத் மீது நிறைய அழுத்தம் உள்ளது. நடராஜனுக்கு எனது  வாழ்த்துகள். கேன் வில்லியம்சன் எங்களின்  ரன் வங்கி. இக்கட்டான நேரங்களை  அவர் அற்புதமாகக் கையாள்கிறார். கேன், ரஷீத் இருவரும் அசத்துகின்றனர்.  அடுத்து டெல்லியுடன் விளையாட தயாராக வேண்டும். அவர்களின் உலகத்தரம் வாய்ந்த  பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது  குறித்து பேசி வருகிறோம்.  ஆனால், நான்  உற்சாகமாக இருக்கிறேன்’ என்றார்.

தோல்வி அடைந்த பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, ‘நாங்கள் போதுமான ரன் குவிக்கவில்லை. அதனால் பந்துவீச்சின்போது நிலைமை மரண தண்டனையாகி விட்டது. கேன் ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பிவிட்டார்.  பந்துவீச்சாளர்கள் விரும்பும் நிலைகளில் வீச வாய்ப்பளித்தோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் ரன் சேர்த்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.  அணியில் படிக்கல், டி வில்லியர்ஸ், சாஹல், சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். மற்றவர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை. இந்த தொடர் ஐபிஎல் அணிகளின் பலத்தை சொல்கிறது. உண்மையான பலம் வெளிப்பட்டுள்ளது.  நாட்டுக்கு வெளியே வந்து விளையாடுகிறோம். அதற்கு நாம் அனைவரும் பங்களித்திருக்கிறோம், ரசிகர்களுக்கு ஏதாவது கொடுத்தோம் என்ற திருப்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எங்களை ஆதரிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி  தெரிவிக்க விரும்புகிறோம்’ என்றார்.



Tags : Williamson , Chasing the target is not so easy ... Williamson says
× RELATED நியூசி. 162 ஆல் அவுட்