×

பிரபல நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1,337 கோடி கண்டுபிடிப்பு: சென்னையில் தலைமையிடத்தில் ஆவணம் சிக்கியது

சென்னை: சென்னை மற்றும் மதுரையில் ஹெரிடேஜ் குழுமத்துக்கு சொந்தமாக பல்வேறு பகுதிகளில் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் சட்ட விரோதமாக பணம் கை மாறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கடந்த 4ம் தேதி சென்னையில் 5 இடங்களில் இந்த குழுமத்தின்  ஓட்டல்களில் ஐ.டி. சோதனை நடந்தது. சென்னை பல்லாவரத்தில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும், மதுரை கோச்சடை பகுதியில்  உள்ள ஹெரிட்டேஜ் மதுரை ஓட்டல் என 9 இடங்களில் சோதனை நடந்தது. ஹவாலா பணம் பரிவர்த்தனை நடக்கிறதா என்றும் சோதனை நடத்தினர். அதில் முக்கிய சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை தரப்பில்  தெரிவித்துள்ளனர். மதுரை வருமான வரித்துறையை சேர்ந்த 10க்கு மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை அதிரடியாக கோச்சடை மெயின் ரோட்டில் உள்ள பிரபலமான ஸ்டார் ஓட்டலில் சோதனையில் ஈடுபட்டனர். மற்றொரு குழுவினர் அந்நிறுவனத்திற்கு  சொந்தமான மதுரை திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல்கள் மற்றும் 3 இடங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.  

இதையடுத்து, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல தகவல் தொழில்நுட்ப  கட்டமைப்பு குழும நிறுவனத்தின் சென்னை அலுவலகம் மற்றும் மதுரை அலுவலகங்கள் உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு வருமான வரி கணக்கு முறைகேடுகள்  நடந்தது தெரியவந்துள்ளது. இந்த குழுமத்தில் 2 நிறுவனங்கள் உள்ளன. ஒரு நிறுவனம் தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டையும், அதன் துணை நிறுவனமான மற்றொரு நிறுவனம் கட்டமைப்பு மற்றும் நிதி தொடர்பான பணிகளையும் மேற்கொண்டு வந்தன.

விசாரணையில், இந்த பிரதான நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்காக 28 சதவீதம் மட்டுமே முதலீடு செய்துவிட்டு மீதமுள்ள 72 சதவீத தொகையை பங்குகள் மூலம் பெற்றுள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்கு சுமார் ₹200 கோடி கிடைத்துள்ளது.  இந்த தொகை தொடர்பான விபரங்களை வருமான வரி தாக்கலில் நிறுவனம் காட்டவில்லை. அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் இந்த நிறுவனத்திற்கு ₹200 கோடி அளவிற்கு பங்குதாரர்கள் மூலம் வந்துள்ளது. இந்த தொகைக்கு  இந்தியாவில் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், வரியை செலுத்தாமல் இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் இந்த நிறுவனங்கள் நீரை இறைக்கும் குழாய்களுக்கு பயன்படுத்தும் குண்டுகளை தயாரிக்கும் 5 புதிய நிறுவனங்களையும் வாங்கியுள்ளது. இதன் மதிப்பு ₹337 கோடியாகும்.

5 நிறுவனங்களிலும் எந்த வேலையும் செய்யாமல்  போலியான பில்களை தயாரித்து பிரதான நிறுவனம் இந்த தொகையை முதலீடு செய்துள்ளது. இந்த தொகையை நிறுவனத்தின் தலைவர் தனது மகன் பெயரில் வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்க மாற்றம்  ெசய்துள்ளார். கடந்த 2009ல் இந்த நிறுவனம் ₹150 கோடிக்கு பங்குகளை பெற்றதற்கான ரசீதுகள் மட்டும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெறுவதற்காக பல்வேறு தவறான தகவல்களை தந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த  2015ல் ₹ 150 கோடிக்கு தனது குழும நிறுவனங்களிலிருந்து பங்குகள் பெறப்பட்டதாக கணக்கு காட்டி வங்கிகளில் இந்த நிறுவனம் கடன் பெற்றுள்ளது. விசாரணையில், இந்த குழுமம் வட்டியில்லாமல் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளன. கணக்கிட்டால் ₹423 கோடி அளவுக்கு வட்டி மட்டுமே வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் சுமார் ₹500 கோடியில் சுமார் 800 ஏக்கர் நிலத்தை இந்த குழுமம் பல்வேறு இடங்களில் வாங்கி குவித்துள்ளது. இதற்காக குழுமத்திடம் இருந்து பணம் செலுத்தப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில்  நியாயமான சந்தை மதிப்புக்கு குறைவாக பங்கு பரிவர்த்தனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  மொத்தத்தில் சுமார் ₹1000 கோடி கணக்கில் காட்டாத வருவாயை இந்த குழுமம் வருமான வரித்துறையிடம் மறைத்துள்ளது.  மேலும், ₹337 கருப்பு பண பரிவர்த்தனையும் நடந்துள்ளது. வருமான வரி சோதனையின் அடிப்படையில் இந்த ஐடி குழும நிறுவனங்கள், நிர்வாகிகள், பங்குதாரர்கள் மீது வருமான வரித்துறை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும்  பினாமி மற்றும் கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழும் இந்த குழுமத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : company ,headquarters ,Chennai , Income tax audit of a popular company: Rs 1,337 crore unaccounted for: Document stuck at headquarters in Chennai
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...