×

இஓஎஸ்-01 உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

சென்னை: இஓஎஸ்-01 உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இந்தநிலையில், பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற  நவீனரக புவிகண்காணிப்பு செயற்கைக்கோள் நவம்பர் 7ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. அதன்படி நேற்று ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து  பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று முன்தினம் மதியம் தொடங்கியது.

ராக்கெட்டை நேற்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ராக்கெட்டை திட்டமிட்டபடி விண்ணில் ஏவும் பணிகள் தடைபட்டது. இதையடுத்து கவுண்டவுன் நேரம்  நிறுத்தப்பட்டது. பின்னர்,
ராக்கெட் புறப்படும் நேரம் 9 நிமிடம் தாமதமாக மதியம் 3.11 மணி என மாற்றப்பட்டது. அதன்படி, சரியாக 3.11 மணிக்கு முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.  பூமியில் இருந்து புறப்பட்டு 15 நிமிடம் 20 வினாடியில் 575 கி.மீ தூரத்தில் இந்தியாவின் இ.ஓ.எஸ்-01 செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டப்படி நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, வணிக ரீதியாக ஏவப்பட்ட  லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4 செயற்கைக்கோள்கள்,  அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைக்கோள்கள், லிதுவேனியா நாட்டிற்கு  சொந்தமான 1 செயற்கைக்கோள் என 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன்  சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இஓஎஸ்- 01 செயற்கைக்கோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும். இது 630 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில்  உள்ள எக்ஸ்பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் அதிக திறன் கொண்ட படங்களை எந்த காலநிலையிலும் துல்லியமாக எடுக்கும்.  பின்னர், இஸ்ரோ தலைவர் சிவன் சக விஞ்ஞானிகளுடன் கைகலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.  தொடர்ந்து அவர் பேசியதாவது:
பி.எஸ்.எல்.வி-சி49 திட்டம்  அசாதாரண சூழலில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா காரணமாக சமூகத்தில் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளை பொறுத்தவரையில் மற்ற பணிகளை போல்  வீட்டில் இருந்து செய்ய இயலாது. ராக்கெட் வடிவமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விஞ்ஞானிகள் வெவ்வேறு இடங்களுக்கு சென்று மேற்கொள்ள வேண்டியது ஆகும்.

எனவே, நோய் தொற்று யாருக்கும் பரவிடக்கூடாது என்பதிலும், அதேநேரத்தில் நாட்டின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். குறைந்த பணியாளர்களை கொண்டு தரத்தில்  எந்தவித குறைபாடும் இல்லாமல் பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. சுயவிருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. கொரோனா அச்சத்திலும் ராக்கெட் ஏவும்  பணிகளுக்கு சிறப்பாக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, எஸ்.எஸ்.எல்.வி என பல்வேறு திட்டங்கள் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ளன.

பார்வையாளருக்கு அனுமதியில்லை
கொரோனா தொற்று காரணமாக ராக்கெட் ஏவுதலை நேரடியாக பார்வையிட பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் யாரும் நேற்று அனுமதிக்கப்படவில்லை. இஸ்ரோவின் வலைதள பக்கத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதல் ஒளிபரப்பு  செய்யப்பட்டது.




Tags : PSLV-C49 rocket successfully launches with 10 satellites including EOS-01
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...