×

பீகார் இறுதிக்கட்ட தேர்தலில் வன்முறை வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி...நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

பாட்னா: பீகாரில் நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டது. வாக்குச்சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், 3 கட்டங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும்  நாளை மறுதினம் எண்ணப்படுகின்றன. பீகார் மாநில சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 28, கடந்த 3ம் தேதிகளில் முதல் மற்றும் 2ம் கட்டத் வாக்குப்பதிவுகள் நடந்தன. கடந்த காலங்களில் பீகார் தேர்தலில் வன்முறைகள் அதிகளவில் நடப்பது  வழக்கம். ஆனால், இப்போது அங்கு தேர்தல் வன்முறைகளை பார்ப்பது அரிதாகி விட்டது. பாதுகாப்பு படைகள் எடுக்கும் கடும் நடவடிக்கைகளே இதற்கு காரணம். முதல் 2 கட்டத் தேர்தல்களும் முழு அமைதியாக நடந்தன. எந்த இடத்திலும்  வன்முறைகள் நடக்கவில்லை.

ஆனால், 3ம் கட்ட தேர்தல் பிரசாரத்தின்போது கடந்த வெள்ளிக்கிழமை, தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஹயாகத் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ரவீந்திரநாத் சிங், மர்ம நபர்களால் சுடப்பட்டார். மருத்துவமனையில்  அனுமதிக்கபட்ட அவர், சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன் கடந்த 24ம் தேதி ஷியோகர் மாவட்டத்தில் உள்ள ஷியோகர் தொகுதியில் போட்டியிட்ட ஜனதா தள ராஷ்டிரவாடி கட்சியின் வேட்பாளர் நாராயண் சிங் பிரசாரத்தில்  ஈடுபட்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 4 பேர் அவரை சுட்டு விட்டு தப்பினர். இதில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில், 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுநேற்று காலை தொடங்கியது. 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. இதில், 55.29 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்த வாக்குப்பதிவின் போது, புர்னியா மாவட்டத்தின் தாம்தகா சட்டப்பேரவைக்கு உட்பட்ட சார்சி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட வந்த பெனிசிங் என்பவரை பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர்  ராஷ்டிரிய ஜனதா தளத்தின் இளைஞர் அணி தலைவர் பிட்டு சிங் என்ற அனிகெட் சிங்கின் சகோதரர் ஆவார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிட்டு சிங், அதிரடிப் படையினரால் நவம்பர் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டு  பாகல்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெனிசிங் கொல்லப்பட்டதை கண்டித்து, உறவினர்கள், அப்பகுதியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. வாக்குப்பதிவும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் கலவரத்தை கட்டுப்படுத்தினர். இதேபோல், தாம்தகா சட்டப்பேரவைக்கு உட்பட்ட அலிநகர் கிராமத்தில் உள்ள  வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் வரிசையில் நிற்கும்படி வலியுறுத்தினர். அப்போது, வாக்களர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த  வாக்காளர்கள் வாக்குச்சாவடியை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், துணை ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். கலவரத்தை கூட்டத்தை கட்டுப்படுத்த, பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  இதனால், பீதியடைந்த வாக்காளர்கள் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை மறுதினம் எண்ணப்படுகின்றன. இதில், பீகாரில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியவரும். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகளை நாட்டு மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

வால்மிகியில் 53% வாக்குப்பதிவு

ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த மக்களவை எம்பி. பைத்யநாத் மகதோவின் மறைந்தை அடுத்து, அவர் போட்டியிட்ட வால்மிகி நகர் மக்களவை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு 53 சதவீத வாக்குகள் பதிவானது.

கருத்து கணிப்பில் இழுபறி

நேற்று மாலை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பல்வேறு அமைப்புகள் வெளியிட்டன. அவற்றில், சிலவற்றில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி  பெறும் என கூறப்பட்டுள்ளது. தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதை, இந்த கருத்து கணிப்புகள் தெளிவாக கூறவில்லை. இதனால், யார் ஆட்சியை பிடிப்பார்கள்  என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Bihar , Violent polling booth shooting in Bihar finals: One killed ... Counting of votes tomorrow
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!