×

காற்றின் திசைவேறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: காற்றின் திசைவேறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலை முதல் திடீரென பலத்த மழை பெய்தது. அதன் பிறகு விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சென்னையில் அண்ணாசாலை, எழும்பூர், சென்ட்ரல், மயிலாப்பூர், ராயப்பேட்டை, மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.காலையில் பெய்த மழையால் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் மழையில் நனைத்தபடி சென்ற காட்சியை காண முடிந்தது. இந்த நிலையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில்(இன்று) பெரும்பாலானான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். அடுத்த 72 மணி நேரத்தில்(9ம் தேதி) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக இடையப்பட்டி(மதுரை), காரியாப்பட்டி(விருதுநகர்), விரகனூர் அணை(மதுரை), மானாமதுரை, பேரையூர்(மதுரை) தலா 5 சென்டி மீட்டர் மழையும், திருப்புவனம்(சிவகங்கை), தல்லாக்குளம்(மதுரை), பிளவக்கல்(விருதுநகர்), காயல்பட்டினம்(தூத்துக்குடி), கூடலூர், திருச்செந்தூர், சோழவந்தானில் தலா 4 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : thunderstorms ,districts ,Meteorological Department , Wind direction, 5 districts, heavy rain, weather
× RELATED நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை...