×

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை ஜனவரியில் தொடங்க திட்டம்

* முதல்வர் எடப்பாடி பொதுப்பணித்துறைக்கு திடீர் உத்தரவு  
* வேகம் எடுக்கும் நிலம் கையகப்படுத்தும் பணி

சென்னை: ₹14 ஆயிரம் கோடி செலவில் நடக்கும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஜனவரியில் அடிக்கல் நாட்டுகிறார். எனவே, நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பருவமழை காலகட்டங்களில் ஆண்டுக்கு பலநூறு டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இவ்வாறு வீணாகும் தண்ணீரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி ரூ14 ஆயிரம் கோடி செலவில் 260 கி.மீ தூரம் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. காவிரியில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ, தெற்கு வெள்ளாறு-வைகை 107.25 கி.மீ, வைகை-குண்டாறு 34.30 கி.மீ வரை அமைகிறது. இதன் மூலம் 2,19,665 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறுகிறது.

இந்த திட்டத்துக்காக முதற்கட்டமாக மாயனூர் கட்டளை கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 1321.68 ஏக்கர் பட்டா நிலமும், 346.69 ஏக்கர் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, ₹1486 கோடி நிதி ேதவைப்படுகிறது. ஆனால், தற்போது ₹700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடந்த 2014ல் கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கதவணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதவணை வழியாக தான் காவிரியில் இருந்து தெற்கு வெள்ளாறுக்கு வெள்ள நீர் திருப்பி விடப்படுகிறது. இந்த திட்டத்தில் அடுத்த கட்டமாக கட்டளை கதவணையில் இருந்து வெள்ளாறு வரை கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக கட்டளை கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ தூரம் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்காக, 572 ஹெக்டேர் பட்டா நிலம் மற்றும் 83.80 ஹெக்டேர் புறம்போக்கும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

இந்த பணியை மேற்கொள்ள வசதியாக பொதுப்பணித்துறை சார்பில் புதிதாக 4 உபகோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நில எடுப்புக்கு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணியை 1 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளை 1 மாதத்துக்குள் முடிக்கும் பட்சத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படுகிறது என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* 14 ஆயிரம் கோடி செலவில் 260 கி.மீ  தூரம் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
* இதன் மூலம் 2,19,665 ஏக்கர் பாசன  பரப்பு பயன்பெறுகிறது.
* இதற்காக,  ₹1486 கோடி நிதி ேதவைப்படுகிறது. ஆனால், தற்போது ₹700 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

Tags : Cauvery-Vaigai-Gundaru, connection project,, in January, project
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...