டெல்டா அமைச்சரிடம் கொடுத்த ரூ. 800 கோடி எங்கே? :அதிமுக நடத்திய மெகா ஆபரேஷன் அம்பலம்; பாமக ஊராட்சி மன்ற தலைவர் கைது

சென்னை, கும்பகோணத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டதில் அமைச்சரிடம் கொடுக்கப்பட்டு இருந்த ₹800 கோடியை வசூலிக்க ஆளுங்கட்சி நடத்திய மெகா ஆபரேஷன் அம்பலமாகி உள்ளது.கும்பகோணத்தில் நேற்று முன்தினம் இரவு கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பெரியவன் என்ற முருகன், அமமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், கும்பகோணம் முன்னாள் நகர பாமக செயலாளர் பாலகுரு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா, முருகனின் சகோதரி மகன் சக்திவேல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

முருகன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், தொடர்ந்து அவர் கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருவதால் கைது செய்ததாகவும் கூறப்பட்டது.ஆனால் இந்த கைது விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் கடந்த 31ம் தேதி இரவு இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் அடக்கம் செய்யப்பட்டது. துரைக்கண்ணுவின் இளைய மகன் ஐயப்பன். அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக உள்ளார். துரைக்கண்ணு திடீரென இறந்து விட்டதால், ஆளுங்கட்சி தரப்புக்கும் அவருக்கும் இடையே நடந்த கோடிக்கணக்கிலான பணப்பரிமாற்றம் குறித்து ஐயப்பனிடம் ஆளுங்கட்சி தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் தனக்கு எதுவுமே தெரியாது, எல்லாமே அப்பாவுக்குத்தான் தெரியும் என மறுத்து விட்டாராம். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி தரப்பில் கொடுத்த அழுத்ததால் ஐயப்பன் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கோடிக்கணக்கான ‘கொடுக்கல்’ தொடர்பாகத்தான் துரைக்கண்ணு மற்றும் மகன் ஐயப்பனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் பினாமிகளுமான கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவரான பெரியவன் என்ற முருகன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், துரைக்கண்ணு மகன் ஐயப்பன் அதிர்ந்து போயுள்ளார்.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் கூறியதாவது: துரைக்கண்ணு பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கியதற்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தார் முருகன். இதற்கு மற்ற 4 பேரும் பக்கபலமாக இருந்து வந்துள்ளனர். முருகனே துரைக்கண்ணுவின் பினாமிதான். இந்நிலையில், ஐயப்பனிடமும் முருகன் நெருக்கமாக இருந்து வந்தார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் குறித்து உளவுத்துறை அளித்த தகவலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு, தஞ்சை ஆகிய தொகுதிகளில் அதிமுக பலவீனமாக உள்ளதாக கூறப்பட்டிருந்ததாம். இதையடுத்து அந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பலம் சேர்க்க தொகுதிக்கு தலா ₹200 கோடி என 4 தொகுதிக்கு ₹800 கோடி அமைச்சரிடம் ஆளுங்கட்சி தரப்பில் தந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த துரைக்கண்ணு கடந்த 25ம் தேதியே இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. அப்போது, துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பனை ஆளுங்கட்சி தரப்பில் அழைத்து பணம் பற்றி விசாரித்துள்ளனர். அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருக்கிறார்.

தொகுதியை பலப்படுத்த கட்சி கொடுத்த கோடிக்கணக்கான பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அதுபற்றி உண்மையை சொன்னால்தான் அவரது இறப்பு பற்றி அறிவிக்கப்படும் என ஆளுங்கட்சி தரப்பில் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஐயப்பன் தலைமறைவாக, அவரை தேடிக் கண்டுபிடித்த ஆளுங்கட்சி தரப்பு, ஐயப்பனையும் அவரது அம்மாவையும் ரகசிய இடத்தில் வைத்து, கொரோனா எனக்கூறி  பணம் பற்றி ரகசியமாக விசாரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகே 31ம் தேதி துரைக்கண்ணு இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இறுதி சடங்கில் ஓபிஎஸ் மற்றும் 8 அமைச்சர்கள் பங்கேற்றனர். வழக்கமாக இறந்தவர்களின் வீட்டுக்கு சென்று கட்சி தலைமை சார்பில் துக்கம் விசாரிப்பார்கள். ஆனால் ஓபிஎஸ் உள்ளிட்ட யாரும் அமைச்சர் வீட்டு பக்கமே செல்லவில்லை. இந்நிலையில்தான், துரைக்கண்ணு மற்றும் ஐயப்பனுக்கு நெருக்கமான முருகன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து ரூ.800 கோடி பற்றி துருவித் துருவி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் முருகனிடம் மட்டும் துரைக்கண்ணு ₹200 கோடி கொடுத்ததாக தகவல் வந்துள்ளது. இதில் ரூ.120 கோடியை பறிமுதல் செய்துவிட்டதாகவும், அந்த பணம் தற்போது மூத்த எம்பி ஒருவரிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், துரைக்கண்ணு ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளதாக சி.எம். செல்லில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அந்தப் புகாரில் துரைக்கண்ணுவின் பினாமி என்று குறிப்பிட்டுள்ளவர்களிடமும் தற்போது ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துரைக்கண்ணு ஏற்கனவே தொகுதிக்கு ₹100 கோடி செலவு செய்வேன் என கட்சி தலைமையிடம் கூறினாராம். இதனால் அந்த பணத்தை கொண்டு வந்து தரும்படியும் ஐயப்பனிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.இந்த ரூ.800 கோடி விவகாரத்தில் கைதான 5 பேரோடு, இன்னும் பலருக்கும் வலை வீசப்பட்டுள்ளது. 23 பேர் வரை போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

₹5000 கோடி சொத்து வாங்கியது எப்படி?

அமைச்சர் தனது பினாமி பெயர்களில் கடந்த 5 ஆண்டுகளில் ₹5000 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சொத்துக்களை வாங்க அனைத்து உதவிகளையும் வக்கீல்கள் செய்து வந்துள்ளனர். இவர்கள் வங்கிகளில் ஏலத்துக்கு வரும் வீடு, வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை அடிமாட்டு விலைக்கு ஏலம்பேசி அமைச்சருக்கு வாங்கி கொடுத்து வந்தனர். அமைச்சர் கவலை கிடமாக இருந்தபோது கூட பினாமி பெயரில் கடைத்தெருவில் உள்ள வணிக வளாகம் ஒன்று வங்கி மூலம் ஏலத்துக்கு வந்திருக்கிறது. சுமார் 2 கோடி மதிப்பு கொண்ட அந்த கட்டிடத்தை ₹67 லட்சத்துக்கு முருகன் தரப்பில் ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.

Related Stories:

>