முககவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமைச்சரால் கொரோனா தொற்று பரவாதா? பாஜ மாநில பொதுச்செயலாளர் கேள்வி

செங்கல்பட்டு: அமைச்சர் ஜெயகுமாரும், அவரை சுற்றியுள்ளவர்களும் முககவசம்  அணியாமல் உள்ளனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படாதா என பாஜ மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கேள்வி எழுப்பினார். வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து பாஜ மாவட்ட தலைவர் பலராமன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், மாவட்ட பார்வையாளர் வேதாசுப்பிரமணியம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரகுராமன் நயாளன் உள்பட  300க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகில் திரண்டனர். அங்கு திடீரென அவர்கள், மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பாஜவினரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், பாஜவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அவர்களை வேனில் ஏற்றி சென்று, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.அப்போது, பாஜ மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், செய்தியாளர்களிடம் கூறுகையில், வேல் யாத்திரைக்கு தடைவிதித்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். கொரோனா பரவல் காரணமாக யாத்திரைக்கு தடை  விதித்ததாக, தமிழக அரசு கூறுவது வெறும் கண் துடைப்பு நாடகம்.

தமிழக அமைச்சர்கள் பல்வேறு கூட்டங்களை நடத்துகிறார்கள். அதில் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். அப்போது கொரோனா பரவாதா.

 மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பாஜ வேல் யாத்திரையை கைவிடவேண்டும். அதுதான் அவர்களுக்கும், கட்சிக்கும் நல்லது என கூறுகிறார். பொது இடங்களில் அவரும், அவரை சுற்றியுள்ளவர்களும் முககவசம் அணியாமல் உள்ளனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படாதா.

தமிழக அரசு கூறும் காரணங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Related Stories:

>