சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தியாகராயர்நகர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையின்போது வெடிவிபத்துகள் நிகழ கூடாது. திருட்டு உள்பட குற்றச்சம்பவங்கள் நடக்க கூடாது. கொரோனா பரவக்கூடாது என்ற 3 நோக்கத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.தியாகராயநகர் பகுதியில் ஏற்கனவே 200 சி.சி.டி.வி. கேமராக்கள் இருக்கிறது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி குற்றச்செயல்களை தடுப்பதற்காக கூடுதலாக 100 சி.சி.டி.வி.கேமராக்கள் பொறுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் கூட்டத்தை கண்காணிப்பதற்கு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காகவும் தீபாவளி பண்டிகை முடிவடையும் வரை 2 டிரோன் கேமராக்களை 24 மணி நேரமும் பயன்படுத்த இருக்கிறோம்.
தீபாவளி பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க ஷாப்பிங் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். கைகளை சானிடைசர் மூலம் கழுவ வேண்டும்.
முககவசம் இல்லாமல் பொருட்கள் வாங்க வருபவர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு முககவசம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடை நுழைவுவாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும். அதனை கடைக்கு உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும் மக்கள் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும்.கேமராவில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக கண்கணிப்பதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே யாராவது குற்றச்செயல்களில் ஈடுபட வந்தால், உடனடியாக பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 500 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செயின் பறிப்பு சம்பவங்களை தடுப்பதற்காக பெண்கள் கழுத்தில் அணிவதற்கு ஸ்கார்ப் துணி தருகிறோம்.
தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் என்று தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டு மூலம் சிறப்பு அனுமதியை பெற்றுள்ளது. ஆண்டுந்தோறும் சுப்ரீம்கோட்டு வழிகாட்டு நெறிமுறைகள், தமிழக அரசின் உத்தரவு போலீசார் மூலம் கடைபிடிக்கப்படுகிறது.எனவே நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.