×

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்ததால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேவதானப்பட்டி: மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்ததால், கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சிமலை கொடைக்கானல் மலையடிவாரத்தில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் தேனி மாவட்டத்தில் நேரடியாக 3,148 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2,111 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் அக்.15ல் பாசனத்திற்கு அணை திறப்பர். நடப்பாண்டில் போதிய மழை இல்லாததால் அணை திறக்கப்படவில்லை. இதனால், நிலங்களில் நேரடி நெல் விதைப்பு, நாற்றங்கால் அமைக்கும் பணி தாமதமானது.

இந்நிலையில், மஞ்சளாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு சீரான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து 205 கனஅடியாக உள்ளது. 57 அடி உயர அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்ததால் மஞ்சளாறு அணை கிராமம், கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : areas ,Manjalaru Dam , Early flood warning for coastal areas as water level of Manjalaru Dam rises to 51 feet
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்