சீர் செய்யப்படுமா ஜெட்டி பாலம்? தொண்டி மீனவர்கள் எதிர்பார்ப்பு

தொண்டி: தொண்டியில் உள்ள ஜெட்டிபாலம் எவ்வித பராமரிப்புமின்றி சிதைந்து வருகிறது. எனவே, மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாலத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தொண்டி பகுதியில் துறைமுகம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தொண்டி கடலில் சிறிய ஜெட்டி பாலம் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் இங்கு நேவிப்படையினர் இருந்த சமயத்தில் அவர்கள் இப்பாலத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.  ஹெலிகாப்டர் இறங்குதளமாகவும் பயன்பட்டது. மீனவர்கள் படகுகளை இப்பாலத்தின் அருகில் கட்டி வைத்துள்ளனர்.

துறைமுகம் அமையும் பட்சத்தில் சரக்குகளை இறக்குவதற்காக இப்பாலத்தை பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 20 வருடங்களாக எவ்வித பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால், பாலம் முற்றிலுமாக சிதிலமடைந்து வருகிறது. இது மீனவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் இப்பகுதி மக்கள் இப்பாலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குடும்பத்துடன் வந்து ரசித்துச் செல்கின்றனர்.

எனவே, மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜெட்டி பாலத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தொண்டி தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா கூறுகையில், தொண்டி பகுதி மீனவர்களுக்கு பெரும் பயனாகவும், இப்பகுதி மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகவும் உள்ள ஜெட்டி பாலம்  பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. எனவே, இப்பாலத்ைத சீரமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.

Related Stories:

>