×

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு சராசரியை விட அதிக மழை பெய்தும் 11 ஏரிகள் மட்டுமே நிரம்பிய சோகம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரியை விட 156 மி.மீ., அதிகளவு பெய்தும், 11 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை சரியாக அகற்றாததே, இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, பரவலாக கொட்டி தீர்த்தது. பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியை விட அதிகளவு மழை, நடப்பாண்டு பெய்தது. இதனால், பல இடங்களில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பின. சேலம் மாவட்டத்தை பொறுத்த அளவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 ஏரிகள் உள்ளன. இதுபோக உள்ளாட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் சுமார் 100 ஏரி, குளம், ஊரணிகள் இருக்கிறது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 ஏரிகளில், தென்மேற்கு பருவமழையின் மூலம் காமலாபுரம் பெரிய ஏரி மற்றும் சிறிய ஏரி, கன்னங்குறிச்சி புது ஏரி, ஆத்தூர் புது ஏரி, அம்மாபாளையம் முட்டல் ஏரி, நெய்காரப்பட்டி ஏரி, ஆக்ரஹார பூலாவரி ஏரி, ஜங்கமசமுத்திரம் ஏரி, பூலா ஏரி, இமாம் பைரோஜி ஏரி, மூக்கனேரி ஆகிய 11 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளது. மீதியுள்ள ஏரிகளில் 3 ஏரிகள் 90 சதவீதமும், 4 ஏரிகள் 70 சதவீதமும், 2 ஏரிகள் 50 சதவீதமும், 27 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியிருக்கிறது. மற்றபடி இதர ஏரிகள் அனைத்திற்கும் தண்ணீர் வரத்து அறவே இல்லை. சேலம் மாவட்டத்திற்கான தென்மேற்கு பருவமழையின் சராசரி 440.60 மில்லி மீட்டராகும். ஆனால், நடப்பாண்டு தெற்மேற்கு பருவமழையின் சராசரி 597.40 மில்லி மீட்டராக பெய்துள்ளது. வழக்கத்தை விட 156 மில்லி மீட்டர் அதிகளவு மழை கொட்டியும், பெரும்பாலான ஏரிகள் நிரம்பவில்லை. இதற்கு காரணம், பல ஏரிகளுக்கான நீர் வழித்தடங்களில் பெருமளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன.

அதனை முறையாக அகற்றாததே தண்ணீர் வரத்து இல்லாமல் போனதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரிகளில் இருந்து மண்ணை அள்ளிச் செல்வதில் தான் கவனம் செலுத்துகின்றனர். அந்த ஏரியை எப்படி பலப்படுத்துவது, ஏரிக்கு நீர் வரும் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுதல், கருவேலம் மரங்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளை செய்யாமல் உள்ளனர். இதனால், ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லாமல் போய்யுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் மூலம் இதர ஏரிகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஓடைகளை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 12 ஏரிகள் நிரம்பியது
சேலம் சரபங்கா வடி நிலக்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் மாவட்டத்தில் 11 ஏரிகள் மட்டுமே நிரம்பியிருப்பதபை போல், நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 70 பெரிய ஏரிகளில், தென்மேற்கு பருவமழை மூலம் மின்னக்கல் ஏரி, சேமூர் பெரிய ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, பாலமேடு சின்ன ஏரி, மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, இளுப்புளி ஏரி, செருக்கலை ஏரி, பருத்திப்பள்ளி ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, இடும்பன்குளம் ஏரி, வேட்டம்பாடி ஏரி உள்ளிட்ட 12 ஏரிகள் மட்டும் நிரம்பியுள்ளன. இதுபோக 2 ஏரிகள் 90 சதவீதமும், 4 ஏரிகள் 70 சதவீதமும், 12 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது. மற்றவை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

Tags : lakes ,Salem district , The tragedy is that only 11 lakes in the Salem district have received above average rainfall this year
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5...