×

பாம்பனில் கடல் சீற்றம் மிதவையுடன் கூடிய கலவை இயந்திரம் கடலில் மூழ்கியது

ராமேஸ்வரம்: ராமநாபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் இரட்டை வழித்தடத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடலுக்குள் கப்பல் செல்லும் மையப்பகுதியில் பாம்பன் கால்வாயின் இரண்டு பக்கத்திலும் மிதவை மேடை அமைத்து தூண்கள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் வீசிய பலத்த காற்றினால் மிதவை மேடையுடன் கூடிய கிரேன், பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள மர மேடையில் மோதி சிக்கி நின்றது. இதனை ஊழியர்கள் மீட்டு முன்பு இருந்த இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தினர். இந்நிலையில் பாம்பனில்  கடந்த 2 நாட்களாக கடல், சீற்றத்துடன் இருப்பதால் வேகமான நீரோட்டத்துடன் காணப்படுகிறது.

காற்றும் வேகமாக வீசுவதால் கடலும் கொந்தளிப்பாக உள்ளது. நேற்று கடல் சீற்றத்தினால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த மிதவை மேடையுடன் கூடிய கான்கிரீட் கலவை இயந்திரம் சரிந்து கடலில் மூழ்கியது. மிதவை மேடை ஆழமான கடல் பகுதியில் சரிந்ததால், மேடையின் மேல் பொருத்தப்பட்டிருந்த கான்கிரீட் கலவை இயந்திரம் கடலில் கவிழ்ந்து ஒரு பகுதி மூழ்கியது. ரயில் பால கட்டுமானப்பணிக்காக கடலில் நிறுத்தப்பட்டுள்ள மிதவையுடன் கூடிய இயந்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சங்கிலியால் இணைக்கப்பட்டு எவ்வித தடுப்புகளும் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் கடலில் அடிக்கடி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், கடலில் போதுமான தடுப்புகளை உருவாக்கி  அவற்றை நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Pamplona ,sea , In Pamplona the mixing machine with the sea rage float sank in the sea
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்