குவாலிபயர்-2ல் விளையாட சன்ரைசர்ஸ் ஐதராபாத் தகுதி: ஆர்சிபி வெளியேற்றம்

அபுதாபி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான எலிமினேட்டர் ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2வது குவாலிபயர் ஆட்டத்தில் நாளை டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். கோஹ்லி தொடர்ந்து 5வது முறையாக டாஸ் தோற்றது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் அணியில் காயம் அடைந்த சாஹாவுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் வத்ஸ் கோஸ்வாமி இடம் பெற்றார்.

ஆர்சிபி அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. கிறிஸ் மோரிஸ், ஜோஷ் பிலிப், ஷாபாஸ் அகமது, இசுரு உடனா ஆகியோருக்கு பதிலாக ஆடம் ஸம்பா, ஆரோன் பிஞ்ச், நவ்தீப் சைனி, மொயீன் அலி சேர்க்கப்பட்டனர். கேப்டன் கோஹ்லி, படிக்கல் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். கோஹ்லி 6 ரன் மட்டுமே எடுத்து ஹோல்டர் வேகத்தில் கோஸ்வாமி வசம் பிடிபட, பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே, 6 பந்துகளை சந்தித்த படிக்கல் 1 ரன் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் கார்க் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சந்தீப் - ஹோல்டர் கூட்டணி அபாரமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, ராயல் சேலஞ்சர்ஸ் 15 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் பிஞ்ச் - டி வில்லியர்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 41 ரன் சேர்த்தது. பிஞ்ச் 32 ரன் எடுத்து (30 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) நதீம் பந்துவீச்சில் அப்துல் சமத் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மொயீன் அலி ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இதனால் ஆர்சிபி 10.4 ஓவரில் 62 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திக்கு தெரியாமல் திகைத்து நின்றது.

ஷிவம் துபே நிதானமாக கம்பெனி கொடுக்க, ஸ்கோரை உயர்த்த டி வில்லியர்ஸ் கடுமையாகப் போராடினார். துபே 8 ரன் எடுத்து ஹோல்டர் வேகத்தில் வார்னரிடம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய டி வில்லியர்ஸ் 39 பந்தில் அரை சதம் அடித்தார்.

நடராஜன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் வாஷிங்டன் சுந்தர் 5 ரன் எடுத்து அப்துலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 5வது பந்து மிகத் துல்லியமான யார்க்கராக அமைய திக்குமுக்காடிப் போன டி வில்லியர்ஸ் (56 ரன், 43 பந்து, 5 பவுண்டரி) கிளீன் போல்டானார். அதிரடி வீரரான அவரால் நேற்று ஒரு சிக்சர் கூட பறக்கவிட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்தது. சைனி 9 ரன், சிராஜ் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் ஹோல்டர் 3, நடராஜன் 2, நதீம் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 132 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய கேப்டன் வார்னர் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்னுடனும், கோஸ்வாமி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாண்டே 24(21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), வில்லியம்டன் 50(44 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பின்னர் விளையாடிய ஹோல்டர் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து சன் ரைசர் ஹைதராபாத் அணி 132 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி குவாலிபயர்-2ல் விளையாட தகுதி பெற்றது.

Related Stories:

>