தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர் பேச்சுவார்த்தை இழுபறி தீபாவளிக்கு புதிய படம் வெளியாவதில் சிக்கல்

தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கு பயன்படும் டிஜிட்டல்  புரொஜக்‌ஷன் எனப்படும் கருவிக்கான வாடகை தொகையை வி.பி.எப் கட்டணம் என்று  அழைக்கிறார்கள். இந்த கட்டணத்தை படத்தை திரையிடும் தயாரிப்பாளர்கள் கட்டி  வந்தார்கள். இனி அந்த கட்டணத்தை தியேட்டர் அதிபர்கள்தான் கட்ட வேண்டும்  என்று தற்போது தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு தியேட்டர்  அதிபர்கள் ஒத்துக் கொள்ளாதவரை புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று  தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். வருகிற 10ம் தேதி தியேட்டர்கள்  திறக்கப்படுகிறது. தீபாவளி ரிலீசுக்காக புதிய படங்கள் காத்திருக்கிறது.  

இந்த நிலையில் இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள்,  டிஜிட்டல் புரொஜக்‌ஷன் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரின் முத்தரப்பு  பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலைப்புலி எஸ்.தாணு,  டி.ராஜேந்தர், முரளி ராமசாமி தலைமையிலான தயாரிப்பாளர்களும், தியேட்டர்  அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், செயலாளர் பன்னீர்  செல்வம், பொருளாளர் இளங்கோ, புரொஜக்‌ஷன் நிறுவன அதிகாரிகள் உள்பட பலர்  கலந்து கொண்டனர். சிலர் நேரிலும், சிலர் வீடியோ கான்பரன்சிங் மூலமும்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  நேற்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால் தியேட்டர்  அதிபர்கள் சங்கமும், புரொஜக் ஷன் நிறுவனமும் பேச்சுவார்த்தைக்கு  முன்வராததால் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. முத்தரப்பு  பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதால் தீபாவளிக்கு புதிய  படங்கள் திரைக்கு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

Related Stories:

>