×

பி.எஸ்.எல்.வி- சி 49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்ட்டவுன் துவங்கியது

பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் 44.5 மீட்டர் உயரம் கொண்டது. இது பி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 51 வது ராக்கெட் ஆகும்

சென்னை: பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் நவீனரக இ.ஓ.எஸ்-01 புவிகண்காணிப்பு செயற்கைகோளை ஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.  கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால், ராக்கெட் ஏவும் பணிகளை இஸ்ரோ மீண்டும் தொடங்கியது. அதன்படி, பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ இன்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.  நவீனரக இஓஎஸ்- 01 செயற்கைகோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை,  காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும். இதனுடன் இணைந்து லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைகோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4, அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைகோள்கள் என 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் 44.5 மீட்டர் உயரம் கொண்டது. இது பி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 51 வது ராக்கெட் ஆகும். மேலும், ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நேற்று மதியம் 1.02 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை பார்வையாளர்கள் ராக்கெட் ஏவுதலை பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ராக்கெட் ஏவுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

Tags : Countdown , PSLV-C49 rocket launches EOS-01 satellite today: Countdown begins
× RELATED அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி...