×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர்கள் சந்திப்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்தனர். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அக்டோபர் 31ம் தேதி நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து சட்ட மன்ற தேர்தலை சந்திப்போம். வரும் 26ம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்கள் திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய தொழிற் சங்கங்கள் போராட்டங்கள் அறிவித்துள்ளன. இதற்கு திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என ஆலோசித்தோம். அப்போது பரிசீலிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். காலம் தாழ்த்துவது சரி இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே காலம் தாழ்த்தாமல் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை கவர்னரை கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பாஜ யாத்திரை நடத்தி இருப்பது சரியல்ல. தடையை மீறி யாத்திரை செல்வது, தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதாகவே தெரிகிறது இது கண்டிக்கதக்கது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

Tags : Anna Arivalayam ,MK Stalin ,Leaders meeting ,Chennai , Marxist commun with MK Stalin at Anna Arivalayam, Chennai. Leaders meeting
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...