ஆளும்கட்சியை மீறி வெற்றி பெற்ற ஆர்.கே.நகரில் இருந்து தொகுதி மாறுகிறார் டிடிவி: பேராவூரணியில் போட்டியிட திட்டம்

சென்னை:  ஜெயலலிதாவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் டிடிவி தினகரன். இவர், தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கட்சியில் இருந்து தினகரனை, ஜெயலலிதாவே ஒதுக்கி வைத்தார். பின்னர் கட்சியில் இருந்தும் நீக்கினார். அவர் உயிரோடு இருக்கும் வரை கட்சிக்குள் தினகரனால் வரமுடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா கையில் கட்சி வந்தது. அதன்பின்னர் சசிகலா சிறையில் அடைக்கப்படும்போது, தினகரனை கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் தினகரன் மீண்டும் கட்சியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். இதனால் அவர் கட்சியை உடைத்தார். அவரால் 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனது.

அதேநேரத்தில் ஆளும் கட்சியை மீறி ஆர்.ேக.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ஆனால் வெற்றி பெற்ற பிறகு அவர் தொகுதிப் பக்கம் போவதையே குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அங்கு செல்வதையே நிறுத்திக் கொண்டார். மழை பாதிப்பு வந்தபோதும், தற்போது கொரோனா பாதிப்பு காலத்திலும் தொகுதி பக்கமே வரவில்லை. இதனால் மீண்டும் ஆர்.கே.நகரில் அவர் போட்டியிட்டால், டெபாசிட் கூட கிடைக்காத நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனால் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதியை தேர்வு செய்து வருகிறார்.

 எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டால், தங்க தமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எப்படியும் தோற்கடித்து விடுவார்கள். ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டால், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் காலி செய்து விடுவார். மன்னார்குடியில் போட்டியிட்டால், சொந்த மாமா திவாகரனே தன்னை கவிழ்த்து விடுவார் என்று ஒவ்வொரு தொகுதியின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். கடைசியில் பேராவூரணி தொகுதியில் போட்டியிடுவது என்று டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேராவூரணி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ கோவிந்தராசு. இந்த தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதியில் போட்டியிட்டால் நல்லது என்று டிடிவி தினகரன் கருதுகிறார்.

 இந்த தொகுதியை குறிவைத்து கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளார். தீபாவளிக்குப் பிறகு பிரமாண்டமான முறையில் பொதுக் கூட்டம் நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என 10 ஆயிரம் பேரை சேர்க்க முடிவு செய்துள்ளாராம். மாற்றுக் கட்சியில் ஆள் கிடைக்காவிட்டாலும் சமுதாய ஆட்களை சேர்த்து கூட்டத்தை பிரமாண்டமாக காட்டி முடிவு செய்துள்ளாராம்.

Related Stories:

>