×

பலமாவட்டங்களில் கொட்டுகிறது கனமழை: கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளம்

* கயிற்றை பிடித்தபடி ஆற்றை கடக்கும் மக்கள்
* ராமநாதபுரத்தில் கடைகளில் மழைநீர் புகுந்து

மதுரை: மதுரை உட்பட தென்மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.  கொடைக்கானல் மலைக்கிராமப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால், ஆற்றை கடக்க முடியாமல் மக்கள் பரிதவித்தனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கைப்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் அனைத்து தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ராமநாதபுரம், வண்டிக்காரத்தெரு பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு மழை நீர் புகுந்தது. கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் கே.சி.பட்டி அருகேயுள்ள கள்ளக்கிணறு பழங்குடியின கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. அப்பகுதியில் உள்ள கள்ளக்கிணறு மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆற்றை கடப்பதற்காக இரு புறங்களிலும் கயிறுகளை கட்டி, அதை பிடித்தவாறு ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர்.  

அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் கடும் அவதியடைகின்றனர். கொடைக்கானல் நகர் பகுதிகளிலும்  நேற்றுகாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல  இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கீழ்மலை  - வடகவுஞ்சி கிராமச்சாலையில் மரம் முறிந்து விழுந்தது.  இதனால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றி,  போக்குவரத்தை சீரமைத்தனர். நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை துவங்கியதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் இரவு, அதிகாலை நேரங்களில் மட்டுமே மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துவங்கி காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.



Tags : floods ,Palamavattam ,Kodaikanal , Heavy rains in Palamavattam: Wild floods in Kodaikanal
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்