அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்கள் வாழ்வில் ஒளி பிறக்கும்: ெதாண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை:  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, அரசாங்கத்தின் கஜானாவைக் கொள்ளையடித்தும்-வெற்று விளம்பரம் தேடிக்கொண்டும் மக்களை ஏமாற்றுகிறது அடிமை அதிமுக அரசு. திமுக என்பது எப்போதும் மக்களின் இயக்கம். ஜனநாயகக் களமான சட்டமன்றத் தேர்தலுக்காகத் தன்னை ஆயத்தப் படுத்திக்கொண்டு, நாள்தோறும் மக்களை நோக்கிக் கடமை ஆற்றச் சென்று கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியான தூய செயல்பாட்டின் ஒரு கட்டம்தான், ‘தமிழகம் மீட்போம்’ என்கிற பெருந்திரள் பொதுக்கூட்ட நிகழ்வுகள்.

 பேரிடரின் இரண்டாம் அலை வீசும் அபாயம் உள்ளது என அனைத்துத் தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளி-கல்லூரிகளைத் திறப்பதாக அறிவித்தது அதிமுக அரசு. அதன் அபாயம் குறித்து திமுக விரிவாக எடுத்துரைத்து, பள்ளி - கல்லூரிகள் திறப்பைத் தள்ளி வைக்க வலியுறுத்தியது. அதைச் செய்தால், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லது என்பதைவிட, மு.க.ஸ்டாலின் சொல்லிச் செய்ததாக ஆகிவிடுமே என்ற காழ்ப்புணர்வினால், கருத்துக் கேட்பு நிகழ்வு என மாற்றி அறிவித்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு என்பதைக்கூடவா தமிழக மக்கள் அறியமாட்டார்கள்?

‘ஆன்லைன்’ சூதாட்டம் காரணமாக அப்பாவிகள் பலியாவது குறித்தும், அதனை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டேன். அடுத்த நாள், முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்கும்போது, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை விதிக்கும் என்கிறார். இப்படி மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஒவ்வொன்றையும் எதிர்க்கட்சியான திமுக தான் முன்னெடுக்கிறது. அதன்பிறகே, ஆட்சியில் உள்ளவர்களுக்கு உறைக்கிறது; புத்தி தெளிகிறது. கொரோனாவின் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டபோதே பொதுமக்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்து குடும்ப அட்டைக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது திமுக.

ஆனால், அதனை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு, தீபாவளிப் பண்டிகையின் காரணமாகவும், தேர்தல் நெருங்குவதாலும், குடும்ப அட்டைக்கு 2000 ரூபாய் தரவிருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதுவும் இல்லை என அமைச்சர் ஒருவர் ‘தெரு’வாய் மலர்ந்திருக்கிறார். திமுக சொன்னதை நிறைவேற்றும் வழக்கம் கொண்ட அதிமுகவின் முதல்வர், இதையும் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள். மாநிலத்தின் கடன் சுமையை அதிகரிக்கச் செய்து, நிர்வாகத்தைச் சீரழித்து, தொழில்வாய்ப்புகள் இல்லாத நிலையை உருவாக்கி, வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் பெருக்கி, மாநில அரசுக்குள்ள உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்ட அதிமுக அரசின் தற்காலிக நிவாரணங்கள் எதுவும் தமிழக மக்களுக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கப் போவதில்லை.

ஊழலில் திளைத்து-கஜனாவைக் கொள்ளையடிக்கும் அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் அலை அலையான பங்கேற்புடன் எழுச்சிமிகு கூட்டங்கள் நடக்கட்டும். தமிழ் மக்களின் பேராதரவுடன், தரணி போற்றத் தமிழகம் மீளட்டும்.

Related Stories:

>