மகளிர் டி20 சேலஞ்ச் பைனலில் யார்?

ஷார்ஜா: மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார் என்பதை முடிவு செய்யும் கடைசி லீக் போட்டியில் டிரெய்ல்பிளேசர்ஸ்-சூப்பர் நோவாஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகளுக்கு இடையில் மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. முதல் லீக் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான  வெலாசிட்டி, ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான  சூப்பர்நோவாஸ் அணிகள் மோதின. அதில் வெலாசிட்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தொடர்ந்து 2வது லீக் போட்டியில்  வெலாசிட்டி,   ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான  டிரெய்ல்பிளேசர்ஸ் அணிகள் மோதின. அதில் வெலாசிட்டி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்  படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், கடைசி லீக் போட்டியில் இன்று இரவு டிரெய்ல்பிளேசர்ஸ்-சூப்பர்நோவாஸ் அணிகள் களம் காணுகின்றன. வெலாசிட்டியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ள டிரெய்ல்பிளேசர்ஸ் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும். கூடவே ஏற்கனவே ஒரு வெற்றியுடன் இருக்கும் வெலாசிட்டியும் பைனலுக்கு தகுதி பெறும்.

இன்றைய போட்டியில் சூப்பர்நோவாஸ் வென்றால்  எல்லா அணிகளும் தலா  ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகளை முடிவு செய்யும். இறுதிப் போட்டி நவ.9ம் தேதி ஷார்ஜாவில் நடக்கிறது.

Related Stories:

>