அமெரிக்க அதிபர் தேர்தல்!: ஜார்ஜியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப்பை முந்தினார் ஜோ பைடன்: வாக்கு எண்ணிக்கை 280-ஆக உயர வாய்ப்பு

வாஷிங்டன்: ஜார்ஜியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் - பைடன் சமஅளவில் இருந்த நிலையில் தற்போது ஜோ பைடன் முன்னிலை வகித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு 264 வாக்கு கிடைத்த நிலையில் தற்போது 280 ஆக உயர வாய்ப்புள்ளது. ஜார்ஜியாவில் டிரம்ப்பை ஜோ பைடன் முந்தியுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் 16 வாக்குகளும் ஜோ பைடனுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3 நாட்களாக இழுபறியில் உள்ள நிலையில், ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்’ என்று டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டு இருந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கையில் மாகாண விதிகளை பின்பற்றக்கோரி டிரம்ப் தரப்பில் ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

அதனை தொடர்ந்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தை டிரம்ப் நாடியுள்ளார். தற்போது அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவுகள் அலாஸ்கா(3), ஜார்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20) ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்து அமைய உள்ளது. இதனால் ஜோ பைடன் பென்சில்வேனியாவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ஜனநாயக பிரச்சாரக்குழு கூறுகிறது. பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று தெரியவந்துவிடும் என்று மாநில செயலாளர் கேத்தி புக்வார் தெரிவித்துள்ளர். அதே நேரம் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: