×

பீகாரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு சுயேட்சை வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு பாஜக, ஆர்ஜேடிக்கு சவாலாக இருப்பதால் பயங்கரம்

பாட்னா, :பீகாரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்றிரவு சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாஜக, ஆர்ஜேடி ெவற்றிக்கு சவாலாக இருப்பதால், இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைவதால், அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 28ம் தேதி முதல்கட்ட தேர்தலும், கடந்த 3ம் தேதி இரண்டாவது கட்ட தேர்தலும் முடிவடைந்தன. நாளை (நவ. 7) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடக்கும் 19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. மேற்கொண்ட தொகுதிகளில் மொத்தம் 12 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசினார்.
அதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மாதேபுரா, அரேரியா ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

முதல்வர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஹயாகட் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ரவீந்திர நாத் சிங் என்ற சிந்து சிங் என்பவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வேட்பாளர் போலா யாதவ் மற்றும் பாஜக வேட்பாளர் ராம்சந்திர ஷா ஆகியோருக்கு தேர்தல் களத்தில் சவாலாக உள்ளார். இவர் அதிகளவு வாக்கை பிரிப்பார் என்பதால், இவருக்கு எதிராக பாஜக, ஆர்ஜேடி ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிந்ததால், ரவீந்திரநாத் சிங் தனது ஆதரவாளர்களுடன் தர்பங்கா நோக்கி நேற்றிரவு காரில் சென்றார். துகவுலி என்ற இடத்தில் ரவீந்திர நாத் சிங் சென்ற காரை ஒரு கும்பல் மறித்தது.  சிங், காரில் இருந்து கீழே இறங்கி அந்த கும்பலிடம் பேச முயன்றார்.

அப்போது, கும்பலில் இருந்த ஒருவன் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். படுகாயமடைந்த சிங், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. தகவலறிந்த போலீசார், ரவீந்திர நாத் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கி சூடு நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : shooting ,candidate ,phase ,Bihar ,BJP ,RJD , Voting, Independent Candidate, Shooting, BJP,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...