×

8 மாதங்களுங்களுக்கு பின் நாடு முழுவதும் 50 % மாணவர்களுடன் பல்கலை, கல்லூரிகளை திறக்க அனுமதி : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது யுஜிசி

புதுடெல்லி, கிட்டத்தட்ட 8 மாதங்களுங்களுக்கு பின் 50 சதவீத மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு ெநறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கிட்டதிட்ட 8 மாதங்களுக்கு பின்னர் தற்போது, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை  பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) வெளியிட்டுள்ளது. அதில், ‘மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, அந்தந்த நிறுவனங்களின் துணைவேந்தர்கள், தலைவர்களே முடிவு செய்யலாம். மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.

முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் கல்வி நிறுவனங்களை திறக்கலாம். நோய்க் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு அனுமதியில்லை. அதேபோல், நோய்க் கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் கல்வி நிறுவனத்திற்குள் வர அனுமதியில்லை. இறுதியாண்டு மாணவர்கள் நேரடி பயிற்சி பெற, வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கலாம். பயணக் கட்டுப்பாடு அல்லது விசா பிரச்னைகள் காரணமாக தவிக்கும் சர்வதேச நாடுகளின் மாணவர்களின் நலனுக்கான தனித் திட்டத்தை கல்வி நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். கொரோனா அறிகுறி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தங்கவோ, அல்லது அறை விடுதிகளில் தங்கவோ அனுமதிக்கக்கூடாது.

‘ஆரோக்யா சேது’ ஆப்ஸ் பயன்பாட்டைப் தங்களது மொபைல் போனில் பதிவிறக்க ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அனைத்து துறை சார்ந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளின் முதுகலை மாணவர்கள் முதலில் கல்லூரிக்கு வரவழைக்கலாம். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கை மற்ற படிப்பு மாணவர்களை விட குறைவாக உள்ளது. எந்தவொரு கல்வி நிறுவனமும் மொத்த மாணவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் அனுமதிக்கக் கூடாது. புதிய வழிகாட்டுதலின்படி, வீட்டில் தங்கி ஆன்லைனிலும், மாணவர்கள் விரும்பினால் வகுப்புகளில் கலந்து கொண்டும் படிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : universities ,colleges ,country ,UGC , Students, University, College, Guidelines, UGC
× RELATED அர்ஜெண்டினாவில்...