×

திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ஹெச். ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது

திருவள்ளூர் : திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. கொரோனாவை காரணம் காட்டி யாத்திரைக்கு அரசு தடை விதித்திருப்பினும், தடை மீறி யாத்திரையை நடத்த பாஜக முடிவெடுத்தது.அதன் படி, திருத்தணியில் தொடங்க உள்ள யாத்திரையில் பங்கேற்க எல்.முருகன் கையில் வேலுடன் இன்று காலை புறப்பட்டு சென்றார். அவருடன் வி.பி.துரைசாமி, கருநகராஜன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் செல்கின்றனர்.

கோயம்பேடு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி வழியாக வந்த வெற்றிவேல் யாத்திரை, பூந்தமல்லி – திருமழிசை கூட்டு சாலையில் திரும்பும்போது கைது செய்வதற்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இரும்பு தடுப்புகள் அமைத்து இருந்தனர். ஆனால் சாமி தரிசனம் என்று எல்.முருகன் கூறியதை அடுத்து, வேல் யாத்திரை பிரசார வாகனத்துடன் 6 வாகனம் உடன் செல்ல போலீஸ் அனுமதி அளித்தது. பாஜகவினர் அந்த தடுப்புகளை மீறி வெற்றிவேல் கோஷமிட்டபடி அங்கிருந்து சென்றனர்.இந்த நிலையில் சற்று முன்னர் திருத்தணிக்கு சென்றடைந்த எல்.முருகன், வேலுடன் சாமி தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, திருத்தணியில் தடையை மீறி தொடங்கிய பாஜகவின் வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் மாநில பாஜக தலைவர் எல்.முருகனும் கைது செய்யப்பட்டார்.எல்.முருகன், தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து பேருந்தில் போலீசார் அழைத்துச் சென்றனர்.

Tags : L. Murugan ,H. BJP ,Tamil Nadu ,pilgrimage ,executives ,Vail ,Raja ,Thiruthani , Thiruthani Murugan, Kovil, Tamil Nadu BJP leader, L. Murugan, Sami Darshan, arrested
× RELATED மகளிர் சுய உதவிக்குழுவுக்கு...