திருத்தணி முருகன் கோவிலில் கையில் வேலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சாமி தரிசனம்!!

திருவள்ளூர் : தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கையில் வேலுடன் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. கொரோனாவை காரணம் காட்டி யாத்திரைக்கு அரசு தடை விதித்திருப்பினும், தடை மீறி யாத்திரையை நடத்த பாஜக முடிவெடுத்தது.அதன் படி, திருத்தணியில் தொடங்க உள்ள யாத்திரையில் பங்கேற்க எல்.முருகன் கையில் வேலுடன் இன்று காலை புறப்பட்டு சென்றார். அவருடன் வி.பி.துரைசாமி, கருநகராஜன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் செல்கின்றனர்.

கோயம்பேடு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி வழியாக வந்த வெற்றிவேல் யாத்திரை, பூந்தமல்லி – திருமழிசை கூட்டு சாலையில் திரும்பும்போது கைது செய்வதற்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இரும்பு தடுப்புகள் அமைத்து இருந்தனர். ஆனால் வேல் யாத்திரை பிரசார வாகனத்துடன் 6 வாகனம் உடன் செல்ல போலீஸ் திடீரென அனுமதி அளித்துள்ளது. பாஜகவினர் அந்த தடுப்புகளை மீறி வெற்றிவேல் கோஷமிட்டபடி அங்கிருந்து சென்றனர்.இந்த நிலையில் சற்று முன்னர் திருத்தணிக்கு சென்றடைந்த எல்.முருகன், வேலுடன் சாமி தரிசனம் செய்தார். இதன் பிறகு அவர் யாத்திரையில் பங்கேற்றால் கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>