×

ஒரு கோடி பயணிகள் பயன் பெறும் நவிமும்பை விமான நிலைய திட்டம் தாமதித்தால் சகிக்க மாட்டேன்-முதல்வர் உத்தவ் தாக்கரே காட்டம்

மும்பை : நவி மும்பையில் ரூ.16,256 கோடியில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலைய கட்டுமான பணியை வரும் மே மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இந்த மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்க்க வகை செய்யும் இந்த பணியை முடிப்பதில் இனியும் தாமதம் செய்தால் ஒரு போதும் சகித்துக் கொள்ள மாட்டேன் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்  நவிமும்பையில் ரூ.16,256 கோடி மதிப்பீட்டில் சர்வதேச விமான நிலைய கட்டுமான பணியை மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனம்( மியால்) மேற்கொண்டு வருகிறது. தேவேந்திர பட்நவிஸ் தலைமையிலான முந்தைய பாஜ அரசு இந்த விமான நிலையத்தை கட்டி முடித்து கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்க திட்டமிட்டிருந்தது. பின்னர் இதை கட்டிமுடிப்பதற்கான காலக்கெடுவை கடந்த மே மாதம் மற்றும் வரும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நீடித்தது. இந்த விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டால் ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகள் பலன் அடைவார்கள். விமான நிலைய கட்டுமான பணிக்கான அனுமதி வழங்கும் அமைப்பாக மாநில அரசின் சிட்கோ உள்ளது.

 இந்த நிலையில் மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனம் அடுத்த மாதம் இந்த விமான நிலையத்தை கட்டிமுடிக்க வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது. இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த விமான நிலைய கட்டுமானப்பணியை முடிப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீடித்துள்ளார்.

இதற்காக இங்கு கட்டுமான பணி மேற்கொண்டுள்ள மியால் நிறுவனத்திற்கு முதல்வர் விடுத்துள்ள உத்தரவில் ``வரும் மே மாதத்தில் இந்த விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தொடங்குவதற்காக ஏற்பாடுகளை விரைந்து செய்யவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக மியால் குழுவினருடன் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் முதல்முறையாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ``மகாராஷ்டிராவுக்கு கூடுதல் முதலீட்டை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த விமான நிலையம் துவக்குவதில் மேலும் காலதாமதம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது’’ என மியால் நிர்வாகிகளை முதல்வர் எச்சரித்தார்.

 இந்த கூட்டத்தில் கலந்து ெகாண்ட தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவி மும்பை விமான நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கட்டுமான பணியை மேற்கொண்டுள்ள மியால் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார். மாநில அரசுக்கு முதலீட்டை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மைல்கல்லாக விமான நிலையம் விளங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாறி மாறி குற்றச்சாட்டு

விமான நிலைய கட்டுமான பணி தாமதத்துக்கு சிட்கோவும் மியாலும் காரணம் என இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. விமான நிலைய ரன்வே அமைப்பது மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக உள்ளூர் மக்களை வெளியேற்றுவதில் மியால் தங்களுடன் இணைந்து செயல்படவில்லை என சிட்கோ குற்றம்சாட்டியது. உள்ளூர் மக்களை வெளியேற்றாததே கட்டுமான பணியில்  கால தாமதம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் மியாலும் சிட்கோவும் இணைந்து விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் இருந்து கிராமவாசிகளை வெளியேற்றவும் அவர்களது மறுவாழ்வுக்கும் தீவிரமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : delay ,Uttam Thackeray ,passengers , Mumbai: The Rs 16,256 crore international airport in Navi Mumbai is expected to be completed by May.
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...