×

உடுமலைப்பேட்டை அணை திறப்பு கரூரை தாண்டி அமராவதி தண்ணீர் திருமுக்கூடலூர் நோக்கி செல்கிறது

கரூர் : நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அமராவதி அணையிலிருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்ட நீர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து கரூர் நோக்கி சென்றது. பின்னர் கரூரை தாண்டி திருமுக்கூடலூர் நோக்கி செல்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4047 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவும் உள்ளது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல், அரவக்குறிச்சி வட்டத்தில் கொத்தப்பாளையம், சின்னதாராபுரம், ராஜபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தற்பொழுது நெல், வாழை, மஞ்சள் போன்ற பணப் பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கன மழை பெய்து வரும் காரணத்தால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அமராவதி அணையிலிருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து கருர் நோக்கிச் சென்றது.

கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆறு சின்னதாராபுரம் பகுதியான ராஜபுரம் பகுதியில் துவங்கி கரூர் நகரின் வழியாக பயணித்து, திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.அமராவதி நீர்ப்பாசனம் மூலம் புலியூர், சுக்காலியூர், செட்டிபாளையம், மேலப்பாளையம், கோயம்பள்ளி போன்ற பகுதிகளில் நு£ற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர் மட்டம் தற்போது 61கன அடி வரை உயர்ந்துள்ளது. இதனையடுத்து, அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்ட பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 875 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் ராஜபுரம் பகுதியை தாண்டி நேற்று பெரியாண்டாங்கோயில் பகுதியில் உள்ள தடுப்பணையை தாண்டி திருமுக்கூடலூர் நோக்கி சென்றது.
இதன் காரணமாக வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகள், விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Udumalaipettai Dam ,Amravati ,Thirumukkudalur ,Karura , Karur: Due to continuous rains in the catchment area, agriculture from the Amravati Dam and
× RELATED மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க...