×

வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாயில் கிடப்பில் போடப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றம்-நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி

வருசநாடு : வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாயில் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கிடப்பில் போட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியம், வருசநாட்டில் சுமார் 64.5 ஏக்கரில் பஞ்சம்தாங்கி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் தண்ணீரை தேக்கினால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் மற்றும் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழும். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் தனிநபர்கள் ஆக்கிரமித்து இலவமரம், தென்னை உள்ளிட்ட மரங்களை வளர்த்து விவசாயம் செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பால் 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய், 10 ஏக்கராக சுருங்கி உள்ளது.

கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருசநாடு பஞ்சம் தாங்கி கண்மாய் விவசாய சங்கத்தின் சார்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் சார்பில் கண்மாயை சார்வே பணி செய்து அங்குள்ள கரைகளை பலப்படுத்தும் பணி நடந்தது. பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து வருசநாடு 8வது வார்டு உறுப்பினர் கனிமொழி கூறுகையில், ‘பஞ்சம்தாங்கி கண்மாயில் பல ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து, அதில் விவசாயம் செய்கின்றனர். இதை அகற்றி கண்மாயை தூர்வார பொதுமக்கள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவிட்டும், ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், போதிய தண்ணீரை தேக்க முடியாமல், நிலத்தடி நீர் குறைந்துள்ளது’ என்றார்.

3வது வார்டு உறுப்பினர் முருகேசன்: கண்மாயில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி நீரைத் தேக்கினால் வருசநாடு, முறுக்கோடை,  தங்கம்மாள்புரம், சிங்கராஜபுரம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். மேலும், 3000 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி மற்றும் 5 ஆயிரம் ஏக்கர் தோட்ட விவசாயிகள் பயனடைவர். இது குறித்து தமிழக முதல்வரும், தேனி மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Varusanadu , Varusanadu: Court orders removal of occupation in the face of Varusanadu famine
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்