×

ஏர்வாடி அருகே டோனாவூரில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் அதிகாரிகள் கவனிப்பார்களா?

ஏர்வாடி : ஏர்வாடி அருகே டோனாவூரில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. காமராஜர் தெரு, போஸ் தெரு, நீலசாமி தெரு, நாராயணசாமி கோயில் தெரு, சிஎஸ்ஐ சர்ச் தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஊரின் கீழ்புறத்தில் உள்ள வடுகச்சிமதில் குளத்தில் சென்று அடையும்.

தற்போது குளத்தில் இருந்து குடியிருப்பு வரைக்கும் வாறுகால் இல்லாமல் இருக்கிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகிலுள்ள தனியார் இடத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதில் பன்றிகள் கூட்டமாக குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வழியே செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களை பன்றிகள் விரட்டுவதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர்.    
 
அனைத்து மதத்தினருக்கும் உள்ள கல்லறை தோட்டம், விவசாயநிலம், கால்நடை மேய்ச்சலுக்கு செல்பவர்கள்  இவ்வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. இந்த வழியாக செல்லும் போது பெரிய பன்றிகள் ஆட்களை கடிக்க துரத்துகிறது. எனவே குடியிருப்பு பகுதியில் இருந்து அருகிலுள்ள குளம் வரை வாறுகால் அமைத்து கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், பன்றிகள் நடமாட்டத்தையும் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் வார்டு உறுப்பினர் ஜான்பால் கூறியதாவது, இங்குள்ள 6 தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகேயுள்ள குளத்திற்கு சென்றடையும். குடியிருப்பில் இருந்து குளம் வரை வாறுகால் வசதி இல்லாமல் கழிவுநீர் தனியார் இடத்தில் தேங்கி நிற்கிறது. அதில் பன்றிகள் கூட்டமாக குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் இப்பகுதி குழந்தைகளுக்கு அடிக்கடி நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வாறுகால் அமைக்க வேண்டும் என்றார்.

Tags : Donavur ,sewerage facilities ,Ervadi , Ervadi: There are about a thousand houses in Donavur near Ervadi. Kamaraj Street, Bose Street, Neelasamy Street
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது