×

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ஆமை வேகத்தில் நடக்கும் 5வது பிளாட்பார மறுசீரமைப்பு பணி-அடிப்படை வசதியின்றி ரயிலை நிறுத்துவதால் பயணிகள் அவதி

சேலம் : சேலம் ரயில்வே ஸ்டேஷனில் 5வது பிளாட்பார்ம் மறுசீரமைப்பு பணி ஆமை  வேகத்தில் நடப்பதால், அனைத்து வேலையும் முடிய இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு  மேல் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் ரயில்வே ஸ்டேஷனை ₹20 கோடியில்  மேம்படுத்தும் பணி, கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில்,  முன்பகுதியில் புதிய டிக்கெட் கவுன்டர், பயணிகள் தங்கும் அறைகள்,  அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஓவியம்  தீட்டப்பட்ட வண்ண கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த  வகையில், 5வது பிளாட்பாரத்தை மறுசீரமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு  செய்தது. இந்த பணியை கடந்த 8 மாதத்திற்கு முன் தொடங்கினர்.

ஏற்கனவே இருந்த  பிளாட்பார்ம் மேற்கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டது. புதிதாக நவீன முறையில்  பிளாட்பார்ம் மேற்கூரை அமைக்கவும், குடிநீர் குழாய்கள், இருக்கைகள்,  கழிவறைகள் அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை ஆமை வேகத்தில்  செய்து வருகின்றனர். இதனால், பிளாட்பார்ம் மேற்கூரை அமைக்க குழி தோண்டி  போடப்பட்ட நிலையிலேயே கிடக்கிறது. அதேபோல், 5வது பிளாட்பார்மில்  புதிதாக ஏற்படுத்தப்பட்டு வரும் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் அமைக்கும்  பணியும் மிகவும் மந்தகதியில் நடக்கிறது.

 இதனால், 5வது பிளாட்பார்ம்  மறுசீரமைப்பு பணி முடிய, இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலை  ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களை, எவ்வித  அடிப்படை வசதியும் இல்லாத 5வது பிளாட்பார்ம்மில் நிறுத்துகின்றனர்.  இதனால், அந்த ரயில்களில் வந்து இறங்கும் பயணிகளும், ஏறும் பயணிகளும் கடும்  அவதியை தினமும் சந்தித்து வருகின்றனர்.

இதுபற்றி பயணிகள் கூறுகையில்,  “5வது பிளாட்பார்மில் கட்டுமானப்பணி நடக்கிறது. அதனிடையே கோவையில்  இருந்து வரும் ரயில்களையும் நிறுத்துகின்றனர். இதனால், மிக சிரமத்துடன்  அந்த ரயிலில் சென்று ஏற வேண்டியுள்ளது. அந்த பிளாட்பார்மில் கழிவறை,  குடிநீர், இருக்கை வசதி எதுவுமே இல்லை. அனைத்தும் இனி தான் அமைக்க  வேண்டியுள்ளது. அதனால், இனியாவது அந்த பிளாட்பார்மில் ரயில்களை  நிறுத்தாமல், மற்ற பிளாட்பார்ம்களில் நிறுத்த வேண்டும். அதேபோல்,  மறுசீரமைப்பு பணியை வேகமாக செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Passengers ,railway station ,Salem ,facilities , Salem: Reconstruction work of the 5th platform at the Salem railway station is in full swing
× RELATED கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்...