×

மாநிலங்களவை உறுப்பினராக ரஜினி, குஷ்பு, அண்ணாமலை ஆகிய மூன்று பேரில் ஒருவருக்கு வாய்ப்பு ?

பெங்களூரு : அசோக் கஸ்தி மறைவால் காலியாக இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடக்கும் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை குஷ்பூ அல்லது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஆகிய மூன்று பேரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க பாஜ தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநில சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு நான்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில் பாஜவை சேர்ந்த அசோக் கஸ்தி தேர்வு செய்யப்பட்டார். ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மட்டும் பங்கேற்ற நிலையில், கொரோனா தொற்று பாதித்து கடந்த செப்டம்பர் மாதம்  காலமானார்.

அவர் மறைவால் காலியாக இருக்கும் உறுப்பினர் பதவியை நிரப்புதற்கான தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலியாக இருக்கும் உறுப்பினர் பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது குறித்து கட்சியின் பாஜ தலைமை ஆலோசித்து வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து பிற மாநிலத்தை சேர்ந்தவர்களை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுப்பது புதியதல்ல. எனவே  உறுப்பினர் தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்தவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க பாஜ தலைமை ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அடுத்தாண்டு தமிழக பேரவைக்கு தேர்தல் நடக்கும் நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்தவர்களை மாநிலங்களவை உறுப்பினராக்குவதன் மூலம் மக்களின் ஆதரவு பெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

வேட்பாளர் தேர்வு பட்டியலில் கர்நாடகாவில் பிறந்து தமிழகத்தில் பிரபல  நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், கர்நாடக மாநில காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி நல்ல பெயரெடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைந்து தமிழக பாஜ துணைத்தலைவராக இருக்கும் அண்ணாமலை மற்றும் கர்நாடக திரையுலகில் ரணதீரா படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழக திரையுலகில் கோலோச்சி தற்போது பாஜவில் இணைந்துள்ள குஷ்பு ஆகிய மூன்று பேரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரம் மூலம் தெரியவருகிறது. எம்பி வேட்பாளராக நிற்க ரஜினி இன்னும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவருகிறது.

கடந்த ஜூன் மாதம் மாநில சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு நான்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் மாநில பாஜ சார்பில் சில வேட்பாளர்களின் பட்டியல் பாஜ மத்திய தேர்தல் பணிக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த பட்டியலை கணக்கில் எடுக்காமல் பாஜ தலைமை ஆச்சரியப்படும் வகையில் யாரும் எதிர்பார்க்காத வேட்பாளர்களை அறிவித்தது. அதேபோல் வரும் டிசம்பர் 1ம் தேதி நடக்கும் தேர்தலில் மாநில பாஜ எதிர்பார்க்காத வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கும். அது தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கும் என்ற தகவல் மாநில பாஜ வட்டாரத்தில் பலமாக எதிரொலிக்கிறது.



Tags : one ,state assembly ,Khushbu ,Rajini ,Annamalai , Bangalore: Ashok Kasti will fill the vacancies in the state assembly
× RELATED தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை...