×

பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனை முற்றுகை

திருவள்ளூர்: பழவேற்காட்டில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள அரங்கன்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவரான குமார் - லட்சுமி தம்பதியருக்கு சுமார் 15 ஆண்டு காலம் குழந்தை இல்லாமல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

நேற்று இந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். பிற்பகலில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தபோது பணியில் அரசு மருத்துவர் இல்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. அப்போது செவிலியர் மட்டுமே அந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தொடர்ந்து இன்று காலையும் பழவேற்காட்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மருத்துவமனை வளாகத்தின் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பழவேற்காட்டில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டை முதன்மையாக வைக்கிறார்கள். 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் காலை நேரத்தி மட்டுமே மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள். பிற்பகல் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைகளுக்காக வருபவர்களுக்கு மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பதால் பல நேரங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு வைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

24 மணி நேரமும் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனம் அவசர உதவிக்காக மருத்துவமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும். பெண் மருத்துவரை நியமித்து மகப்பேறு பிரிவு முறையாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது இந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் ஆகியோர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக எழுதி கையெழுத்திட்டு தருமாறு அவர்கள் கோரிக்கை அளித்ததின் அடிப்படையில் தற்போது அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதி அளித்திருக்கிறார்கள். பழவேற்காடு அரசு மருத்துவமனையில் இன்று முதல் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும். மகப்பேறு பிரிவு முறையாக செயல்படும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து தற்போது இந்த மீனவர்களுடைய போராட்டம் முடிவுக்கு வரக்கூடிய சூழல் நிலவுகிறது.

Tags : siege ,Fruitland Government Hospital: Hospital , Palaverkadu, Government Hospital, Child Mortality, Struggle
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...