×

அறந்தாங்கி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அறந்தாங்கி : அறந்தாங்கி அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளன. இந்த மருத்துவமனைகளில் அனைத்து பிரிவுகளுக்கும் பல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதிநவீன மருத்துவ பரிசோதனை கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் விபத்து பிரிவு, விஷமுறிவு பிரிவு, இருதய பிரிவு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளும், அந்த பிரிவுகளுக்கு தலைசிறந்த மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட அளவிலான மருத்துவம் சார்ந்த அலுவலகங்களும் தலைமை மருத்துவமனைகளில் இயங்குகின்றன.

மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்போது, அங்குள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லுhரி மருத்துவமனைகளாக மாற்றம் செய்யப்பட்டன. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகளை அந்த மாவட்டத்தில் உள்ள பெரிய நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டபோது அங்கிருந்த மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்பின், மாவட்ட தலைமை மருத்துவமனையாக, மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராகவும், பெரிய மருத்துவமனையாகவும் உள்ள அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என அறந்தாங்கியில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.

ஆனால் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டு, பல மாதங்கள் ஆனநிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை, பரிசோதனை இயந்திரங்கள் பழுது, சிறப்பு மருத்துவர்கள் இல்லாமை போன்ற பிரச்னைகளால், அங்கு வரும் அவசர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அவர்களை புதுக்கோட்டைக்கு அனுப்பிவைக்கும் நிலை உள்ளது.

இதனால் அவர்கள் புதுக்கோட்டைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் நிலை உள்ளது.விபத்தில் சிக்கியவர்களுக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உரிய மேல்சிகிச்சை அளிக்க தற்போது போதுமான வசதி இல்லாததால்,விபத்தில் சிக்குபவர்களை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்ப வேண்டி உள்ளது. அவ்வாறு அவர்கள் மேல்சிகிச்சைக்கு ஆம்புலன்சில் செல்லும் நேரத்தில், தேவையான வெண்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் அவர்கள் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. கூறப்படுகிறது. இந்நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்திருந்தால் விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் நிலை ஏற்படும்.

அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை கடற்பகுதி, கிழக்கு கடற்கரை சாலை என்னும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை, 7 வட்டங்களை சேர்ந்தவரகள் சிகிச்சை பெற வரும் மருத்துவமனை என பல வகைகளில் முக்கியத்துவம் பெற்ற மருத்துவமனையாக விளங்கி வருகிறது.
தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அரசு மருத்துவமனையை புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக உடனடியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறையாக முதலுதவி கிடையாது

அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனைக்கு அவசர உயிர்காக்கும் சிகிச்சைகளான விபத்து, மாரடைப்பு, விஷகடி, தீக்காயம், சிக்கலான பிரசவம் போன்றவற்றிற்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் சில சமயங்களில் முறையாக முதலுதவி கூட செய்யாமல், மேல்சிகிச்சைக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவிடுகிறது.

அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்சிலேயே செல்லும் வழியிலேயே சிலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. அதே சமயம் அவசர உயிர்காக்கும் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலேயே ஸ்கேன் எடுத்து பார்த்து முடிந்தவரை சிகிச்சை அளித்தால், புதுக்கோட்டை போகும் வழியிலேயே உயிர் போகும் நிலை ஏற்படாது.

Tags : Aranthangi Government Hospital , Aranthangi: The public has demanded that the Aranthangi Government Hospital be upgraded.
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை...