×

முதன்முறையாக கொடுமணலில் ஆ, ஈ எழுத்துக்கள் ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் : ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தகவல்

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், கொந்தகை மற்றும் தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் மேலும் பல கட்ட அகழாய்வுகளை மேற்கொள்ளவும், அருங்காட்சியகம் அமைக்கவும் உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியாகவுரி ஆஜராகி, ‘‘ஆதிச்சநல்லூர், புலிகட்டு, மலையடிப்பட்டி, கீழடி ஆகிய பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளின் அறிக்கைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

விரைவில் அறிக்கை வெளியிடப்படும். கொடுமணலில் எடுக்கப்பட்ட 10 அகழாய்வு பொருட்கள் கார்பன் டேட்டிங் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இங்கு 96 பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன. இதுவரை நடந்த அகழாய்வுகளில் தமிழ் நெடில் எழுத்துக்கள் கிடைக்கப் பெறவில்லை. ஆனால்,ெகாடுமணலில் “ஆ மற்றும் ஈ” என்ற நெடில் எழுத்துக்கள் கிடைத்துள்ளன’’ என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘‘அதிக கல்வெட்டுகள் தமிழில் இருக்கும் போது ஏன் சமஸ் கிருதத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கல்வெட்டுகளை படிமம் எடுப்பது எந்த நிலையில் உள்ளது’’ என்றனர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘இதுவரை 11 ஆயிரம் கல்வெட்டுகள் படிமம் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ் கல்வெட்டுகள் பெரும்பாலும் 15 அடிக்கு அதிகமாக இருப்பதால் அவற்றை படிமம் எடுப்பதில் பெரும் சிரமம் உள்ளது. அதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதிகளாக 94 இடங்கள் உள்ளன. தற்போது புதிதாக 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன’’ என்றார்.அப்போது நீதிபதிகள், ‘‘ராஜராஜசோழன் நினைவிடம் தொடர்பான பணிகள் எந்த நிலையில் உள்ளன’’ என்றனர்.

இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘‘இதுதொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவிடம் அரசுத் தரப்பில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர்களது அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை இருக்கும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘கொடுமணல் அகழாய்வுப் பொருட்களை கார்பன் டேட்டிங் சோதனைக்காக அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு 10 நாட்களில் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச.7க்கு தள்ளி வைத்தனர்.


Tags : Kodumanal ,Adichanallur ,E ,Icord Branch , For the first time in kotumanal b, d characters aticcanallur, kilati Excavating report will be published soon: High Court of the Federal Government Information Branch
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...