×

தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே ஆந்திர எல்லையோரம் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் தமிழ்நாடு தரப்பு மக்கள்  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆந்திர எல்லையில் தோக்கம்மூர் ஊராட்சிக்கு உட்பட்ட தமிழக பகுதி உள்ளது. இங்கு ஆந்திர மாநில நபருக்கு சொந்தமான இடத்தில் கடை உள்ளது. அங்கு டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் ஏற்பாடுகளை  செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கண்ட கடை அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள காரூர் என்கிற ஆந்திர பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் முனுசாமி என்பவர் தலைமையிலும் தமிழக பகுதி தோக்கம்மூர் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் மணி, தேமுதிக பிரமுகர் எஸ்.பி.டி.ராஜேந்திரன் முன்னிலையில் சுமார் 100 பேர் மேற்கண்ட பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரம்பாக்கம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அமல்ராஜ் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திய போது மேற்கண்ட கடை அமைந்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவ்வழியே செல்லும் மக்களுக்கு இடையூறாய் இருக்கும் என்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அமல்ராஜ் தெரிவித்தார். இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளை கேட்ட போது, டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடம் வெட்ட வெளியான இடம் என்றும், அதனை ஒட்டி எந்த வீடுகளும் இல்லை, மேற்கண்ட டாஸ்மாக் கடையால் யாருக்கும் தொந்தரவு  இருக்காது என்றனர்.

தமிழகத்தில் 140 ரூபாயாக உள்ள மதுபாட்டில் விலை ஆந்திராவில் 250ரூபாயாக உள்ளதால் தமிழக எல்லையை ஒட்டி உள்ள ஆந்திர பகுதியான காரூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் பாதிக்கும் என்பதற்காக தமிழக எல்லையோர டாஸ்மாக் கடைக்கு ஆந்திர பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த மதுபான பிரியர்கள் கருத்து தெரிவித்தனர். 


Tags : liquor shop ,border ,Tamil Nadu ,Andhra Pradesh , Andhra Pradesh protests against setting up of liquor shops on Tamil Nadu border
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது