×

பலர் தற்கொலை எதிரொலி: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கோவை: ‘தமிழகத்தில் ரம்மி உள்பட அனைத்து ஆன்லைன் விளையாட்டுக்கும் தடை விதிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு, விமான நிலையத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்ேபாது முதல்வர் அளித்த பேட்டி: கோவை மாவட்ட மக்கள், வளர்ச்சி பணிகள் தொடர்பாக வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தற்கொலைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக அரசு, இதை கவனத்தில் கொண்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு, மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்விளையாட்டை, தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்ய பரிசீலனை நடக்கிறது. இந்த விளையாட்டுகளை நடத்துகிறவர்களை  கைது செய்யவும்  உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். தமிழகத்தில், பா.ஜனதாவின் ‘‘வேல் யாத்திரை’’க்கு சட்ட ரீதியாக அனுமதி தர முடியாது. ஊர்வலம்  நடத்தக்கூடாது என மத்திய-மாநில  அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. அந்த சட்டத்தின்படி அனுமதி வழங்க இயலாது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பள்ளிகள் திறந்தால் பாதிப்பு தலைவர்களின் கருத்தை அரசு கவனத்தில் கொள்ளும்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியின்போது, பள்ளிகள் திறப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘‘தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கவேண்டும் என கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் கல்வி நிறுவனங்களை திறக்கலாம்  என அரசு முடிவு செய்தது. ஆனால், பள்ளிகள்  திறக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும் என சில தலைவர்கள் கூறி வருகின்றனர். இதையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

Tags : Edappadi Palanisamy ,announcement , Echoes of many suicides: Online games to be banned soon: Chief Minister Edappadi Palanisamy's announcement
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...