×

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார். அத்துடன் அக்கடிதத்தின் நகலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் அனுப்பி வைத்துள்ளார். மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

ஆனால், அவர்களை விடுவிக்க அதிமுக அரசு பரிந்துரைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், திமுகவின் தொடர் அழுத்தத்தின் விளைவாகவும், ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 9.9.2018 அன்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது. அரசியல் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்றவர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அப்படித் தவிர்க்கவில்லையென்றால் அந்த பதவியில் இருப்போருக்கு உச்ச நீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் 21.1.2020 அன்று தாக்கல் செய்த எஸ்.எல்.பி. மீதான உத்தரவில் ‘இரு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம். 2014ம் ஆண்டு ரிட் மனு (குற்றவியல் வரம்பு) 48ன் மீது, 6.9.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் - மனுதாரரின் (பேரறிவாளன்) அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161ன் படி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஏதாவது முடிவெடுத்துள்ளதா என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில், 3.11.2020 அன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது - உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பொதுவெளியில் செய்திகளாக வெளிவந்துள்ளன.

மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல்- தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே அந்த தோற்றத்தை நீக்கிட, தமிழக அமைச்சரவையின் 9.9.2018ம் தேதியிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து - உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  மாநில அரசின் பரிந்துரையை 2ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல் நிறுத்தியிருப்பது சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.


Tags : prisoners ,Rajiv Gandhi ,Governor ,MK Stalin , Seven prisoners in Rajiv Gandhi assassination case should be released immediately: MK Stalin's letter to the Governor
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...