தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன்.  3வது அணி எங்கள் தலைமையில் அமையும். நல்லவர்கள் எங்களுடன் வந்து இணைந்த பிறகு இது முதல் அணியாக மாறும். தேர்தல் கூட்டணி பற்றி இப்போது எதுவும் கூற இயலாது. நல்லவர்களுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம். ரஜினியின் உடல் நிலை பற்றி எனக்கு ஏற்கெனவே தெரியும். அவரும் நானும் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.  

அரசியலுக்கு வருவது குறித்து முடிவு  செய்ய வேண்டியது அவர்தான். ஒருவேளை அவர் கட்சி தொடங்காவிட்டால் அவரிடம்  ஆதரவு கேட்பேன். வேல் யாத்திரை நடத்துவது பற்றி கேட்கிறீர்கள். எனது வேலை மக்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பது. அந்த வேலை யார் வேண்டுமானாலும் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போகலாம். இந்த வேலையை செய்யத்தான் ஆள் இல்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு தடை விதித்த காவல் துறைக்கு நன்றி. நவம்பர் 26ம் தேதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். திருச்சி, மதுரையில் பிரசாரம் செய்கிறேன். டிசம்பர் 12 முதல் கோவை, சேலம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>