கொரோனா ஒழிப்புக்கான நுழைவாயில்களில் கிருமி நாசினி, கதிர் வீச்சுகளை மக்கள் மீது பயன்படுத்த தடை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா ஒழிப்புக்காக பொது இடங்களில் அமைக்கப்படும் நுழைவாயில்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த கிருமி நாசினி, கதிர்வீச்சுகளை பயன்படுத்த தடை விதிப்பதற்கான உத்தரவை 30 நாட்களில் பிறப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னை உலகம் முழுவதும் மிகப்பெரிய தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. மேலும் இதற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்காப்புக்காக கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும், பொது இடங்களில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, மக்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

புற ஊதாக்கதிர் வீச்சும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பொது இடங்களில் பெரிய அளவிலான இயந்திரங்கள் மூலம், மக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று தெளிக்கப்படும் கிருமி நாசினியானது மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்சிம்ரன் சிங் நருலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், நுழைவாயில்கள், இயந்திரங்கள் மூலம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கடுமையான ரசாயனம் கலந்த கிருமி நாசினி பயன்படுத்தப்படுவதற்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மனிதர்கள் மீதும் கிருமி நாசினியைத் தெளிக்கலாம் என்று எங்கும் பரிந்துரைக்கப்படவில்லை. இது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும். இது போன்ற கிருமி நாசினியில் கடுமையான ரசாயன வகைகள் கலக்கப்படுகிறது. இதனால், மனிதர்களுக்கு கண் எரிச்சல், தோலில் அரிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தும். இது குறித்து உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை செய்துள்ளது. அதனால், இந்தியாவை பொருத்தமட்டில் இது போன்று கேடு விளைவிக்கும் கடுமையான ரசாயனம் கலந்த கிருமி நாசினிக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டது.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். மேலும், இதே விவகாரத்தில் தமிழகத்தை சார்ந்த இடைக்கால மனுதாரர் ஜகன்நாதன் என்பவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாரிவேந்தன் வாதத்தில்,” எங்களது தரப்பில் தயாரிக்கப்படும் கிருமி நாசினியானது முழுமையாக இயற்கையானதாகும். குறிப்பாக இதில் தைல மரத்தின் இலைகள், கிராம்புகள் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.

மேலும் இது மனிதர்கள் மீது தெளிக்கப்படுவது கிடையாது. நீராவியாக மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடலுக்கு எந்தவித பாதிப்புகளும் வர வாய்ப்பில்லை. அதனால் இதனை நாடு முழுவதும் பயன்படுத்த அங்கீகரிக்க வேண்டும்,’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கடந்த வாரம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ‘மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கடுமையான ரசாயனம் கொண்ட கிருமி நாசினிகளை நுழைவாயில்களில் பயன்படுத்த நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். இதற்கான உத்தரவுகளை மத்திய அரசு 30 நாட்களில் வெளியிட வேண்டும். மனித உயிர்களை காக்கும் அடிப்படை உரிமை அரசுக்கு உள்ளது. ஆனால், இதற்காக 29 நாட்கள் வரை காத்திருந்து விட்டு கடைசி நேரத்தில் காரணம் தெரிவிக்க வேண்டாம்,’’ என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>