×

மகளிர் டி20 சேலஞ்ச் வெலாசிட்டியை விரட்டியது டிரெய்ல்பிளேசர்ஸ்: எக்லஸ்டோன் அபார பந்துவீச்சு

ஷார்ஜா: மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் லீக் ஆட்டத்தில், டிரெய்ல்பிளேசர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணியை மிக எளிதாக வீழ்த்தியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெலாசிட்டி அணி, தனது 2வது லீக் ஆட்டத்தில் நேற்று டிரெய்ல்பிளேசர்ஸ் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற வெலாசிட்டி கேப்டன் மித்தாலி ராஜ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ஆனால், டிரெய்ல்பிளேசர்ஸ் வீராங்கனைகளில் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெலாசிட்டி 15.1 ஓவரிலேயே 47 ரன்னுக்கு சுருண்டது.ஷபாலி வர்மா அதிகபட்சமாக 13 ரன் எடுத்தார். ஷிகா பாண்டே 10, கேஸ்பரெக் ஆட்டமிழக்காமல் 11 ரன் எடுக்க, கேப்டன் மித்தாலி உட்பட மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர் (3 பேர் டக் அவுட், 3 பேர் தலா 1 ரன்).

டிரெய்ல்பிளேசர்ஸ் பந்துவீச்சில் சோபி எக்லஸ்டோன் 3.1 ஓவரில் 1 மெய்டன் உட்பட 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஜுலன், ராஜேஸ்வரி தலா 2, தீப்தி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய டிரெய்ல்பிளேசர்ஸ் 7.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து மிக எளிதாக வென்றது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். தியாந்த்ரா டோட்டின் 29 ரன், ரிச்சா கோஷ் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சோபி எக்லஸ்டோன் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். டிரெய்ல்பிளேசரஸ், வெலாசிட்டி அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் டிரெய்பிளேசர்ஸ்-சூப்பர்நோவாஸ் அணிகள் மோதுகின்றன.

Tags : Trailblazers ,Ecclestone Superb , Trailblazers chase women's T20 Challenge Velocity: Ecclestone bowling prowess
× RELATED மகளிர் டி20 டிரெய்ல்பிளேசர்ஸ் சாம்பியன்