வெற்றிநடை தொடர சன்ரைசர்ஸ் முனைப்பு ராயல் சேலஞ்சர்சுடன் இன்று எலிமினேட்டரில் பலப்பரீட்சை: வெளியேறப்போவது யார்?

அபுதாபி: ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன் எலிமினேட்டர் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் இந்த தொடரில், லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடுகின்றன. மும்பை-டெல்லி அணிகளிடையே நடந்த முதல் குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும் நிலையில், தோற்ற அணி மற்றொரு வாய்ப்பாக 2வது குவாலிபயரில் விளையாடக் காத்திருக்கிறது. இந்த நிலையில், 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த சன்ரைசர்ஸ்  ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று எலிமினேட்டர் ஆட்டத்தில் கை கலக்கின்றன.

தோற்றால் மூட்டை கட்டவேண்டியது தான் என்ற நெருக்கடியுடன் வாழ்வா? சாவா? போட்டியில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி, தொடர்ச்சியாக வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற சவாலை மிகத் திறம்பட எதிர்கொண்டு சாதித்துக் காட்டியிருக்கிறது. அதிலும், கடைசியாக விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் டெல்லி, பெங்களூர், மும்பை என முன்னணி அணிகளை போட்டுத் தள்ளியது உண்மையிலேயே பிரமிக்கத்தக்க சாதனை தான். இந்த வெற்றி நடையில் கேப்டன் வார்னர், விருத்திமான் சாஹா தொடக்க ஜோடியின் பங்களிப்பு மகத்தானது. மூன்று போட்டியில் இரண்டு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து இவர்கள் அசத்தியுள்ளனர். டெல்லிக்கு எதிராக 107 ரன் சேர்த்தவர்கள், நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 151 ரன் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தக் காரணமாக இருந்தனர்.

அணியை முன்னின்று வழிநடத்துவதுடன் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வார்னர் 14 போட்டியில் 529 ரன் விளாசி, நடப்பு சீசன் ரன் வேட்டையில் 2வது இடத்தில் உள்ளார். இதுவரை 3 போட்டியில் மட்டுமே களமிறங்கியுள்ள சாஹா 184 ரன் குவித்து தனது திறமையை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார். இவர் உள்ளே வந்த பிறகு மணிஷ், கேன், கார்க், ஹோல்டர் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையே இல்லை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு வார்னர்-சாஹா ஜோடியின் ஆட்டம் அமர்க்களமாக உள்ளது என்றே சொல்லலாம். பந்துவீச்சிலும் சந்தீப், ஹோல்டர், நதீம், நடராஜன், ரஷித் கான் மிரட்டி வருகின்றனர். பவர்பிளே ஓவர்களில் சந்தீப், நடுகட்டத்தில் ரஷித், இறுதிக்கட்டத்தில் நடராஜன் என்று எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்குகின்றனர். ஹோல்டர், நதீம் வருகை சன்ரைசர்ஸ் பந்துவீச்சை இன்னும் பலமாக்கி இருக்கிறது.

வெற்றி நடையைத் தொடர சன்ரைசர்ஸ் முனைப்புடன் வரிந்துகட்டும் நிலையில், கோஹ்லி தலைமையிலான ஆர்சிபி தோல்விப் பாதையில் இருந்து மீள பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. சிறப்பான செயல்பாட்டுடன் அமர்க்களமாக முன்னேறிக் கொண்டிருந்த அந்த அணி, கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிளும் தோல்வியைத் தழுவி திக்கு தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறது. ஐபிஎல் கோப்பையை முத்தமிட வேண்டும் என்றால் ‘ஹாட்ரிக்’ வெற்றி அவசியம் என்ற இக்கட்டான நிலையை ஆர்சிபி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பார்மில் உள்ள படிக்கல், கோஹ்லி, டி வில்லியர்ஸ் ஆகியோருடன் மற்ற வீரர்களும் இணைந்து போராடினால் மட்டுமே சன்ரைசர்சுக்கு ஈடு கொடுக்க முடியும். இரு அணிகளுமே குவாலிபயர் 2 வாய்ப்பை குறிவைப்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories:

>