×

'25 வருடமா தண்ணி குடிக்கல... சிகரெட்தான் புகைக்கிறேன்’ ஜீவ சமாதி அடைய முயன்ற அகோரியால் பரபரப்பு: தடுத்து நிறுத்திய போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அகோரி ஜீவசமாதி அடைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - ஜெயலட்சுமி. இவர்களது 3வது மகன் அசோக் (எ) சொக்கநாதர்(39). இவர் 13 வயதில் காணாமல் போனார். 26 வருடங்கள் கழித்து கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது தான் வீட்டை விட்டு வெளியேறி காசிக்கு சென்றதாகவும், அங்கு சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறி விட்டதாகவும் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர், ஜீவசமாதி அடைய போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ராஜதானி போலீசார் வந்தனர். கிராமத்தில் உள்ள தோட்டத்தில் 12 அடி ஆழ குழி தோண்டப்பட்டிருந்தது. குழிக்குள் சிமென்ட் ஸ்லாப் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. வெளியே ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தனர். அதன் உள்ளே சொக்கநாதர், அகோரி கோலத்தில் அமர்ந்திருந்தார். அருகில் சிவன் படம், ருத்ராட்ச மாலை, பூக்கள் கிடந்தன.
போலீசார் அவரிடம், ஜீவசமாதி அடையக்கூடாது, ேமலே வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு அவர், ‘‘தற்போது நாட்டில் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நல்ல மழை பெய்து மக்களை காப்பாற்ற வேண்டும். இதற்காக சிவன் உத்தரவிட்டதால் பூமிக்கு அடியில் 9 நாட்கள் தவம் இருக்க போகிறேன். ஒரு நாள் கழித்து குழி மீது ஸ்லாப் போட்டு மேலே மூடிவிடுங்கள். 9 நாள் கழித்து தீபாவளிக்கு முதல் நாள் நான் வெளியே வருவேன். நான் சித்தர் இல்லை. அகோரி. நான் 25 வருடங்களாக தண்ணீர் குடிப்பதில்லை. சிகரெட் மட்டுமே புகைத்து வாழ்கிறேன். நான் சாகமாட்டேன். 24 வருடங்களுக்கு முன்பே இறந்து பல பிறவிகள் எடுத்து, மீண்டும் மீண்டும் உயிருடன் வந்து கொண்டிருக்கிறேன்.

இது எனது உண்மையான உருவம் அல்ல. நான் இப்போது பாம்பு ரூபத்தில் உள்ளேன். அகோரிகள் கோபப்பட்டால் மனிதர்கள் தாங்க மாட்டார்கள். என்னை தவம் இருக்க விடுங்கள்’’ என்று கூறினார். இதனையடுத்து போலீசார், ‘‘பூமிக்குள் இறங்கி பூஜை செய்ய அரசு அனுமதி இல்லை. வெளியே வாருங்கள்’’ என்று கூறினர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், அகோரிக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியே வந்த அகோரி குழிக்கு மேலே அமர்ந்தார்.

‘‘பூமிக்கு அடியில் அமர்ந்து பூஜை செய்ய போலீசார் அனுமதி மறுத்ததால், சிவன் மற்றும் நந்தி சிலைகளை பிரதிஷ்டை செய்து அதன் அருகில் அமர்ந்து பூஜை செய்ய உள்ளேன்’’ என்று கூறினார். இதையடுத்து பொதுமக்கள் குழியை மூடினர்.
மீண்டும் சொக்கநாதர் குழிக்குள் இறங்கிவிடக் கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : tomb ,Agori , 'I have been drinking water for 25 years ... I smoke only cigarettes' Agori agitates while trying to reach Jiva Samadhi
× RELATED ஓடிடியில் வெளியாகிறது அகோரியின் கதையான “காமி” திரைப்படம்