பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் போல் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சிறப்பு மசோதா நிறைவேற்றாவிட்டால் சட்டபேரவை முன் போராட்டம்: விவசாயி என கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்வாரா?

திருச்சி: மத்திய வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயம் சம்பந்தப்பட்ட மாநில உரிமைகளை பெற பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள மசோதாக்களை போல் தமிழக அரசும் உடனடியாக சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி மசோதாவை நிறைவேற்றாவிட்டால் சட்டமன்றம் முன் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 புதிய வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேறியது.

இதேபோல் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேறியது. இதில் வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இச்சட்டத்தால் இப்பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் வியாபாரிகள் இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதனால் உணவுப்பொருட்கள் பதுக்கப்படும். செயற்கையான தட்டுப்பாடு சூழலை உருவாக்கி விலை உயர்த்தி விற்கப்படும் அபாயம் உள்ளதாகவும், வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும்,வேளாண் மசோதாக்களால் குறைந்தபட்ச ஆதார விலை கூட விவசாயிகளுக்குக் கிடைக்காது.

மாறாக விளைபொருட்களை பதுக்கி செயற்கையான விலை உயர்வை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள், உணவு பொருட்கள் சட்ட திருத்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர். தமிழகத்தில் விவசாய சங்கங்கள், திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். நாடு முழுவதும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேறியதை தொடர்ந்து சில நாட்களிலேயே, பருப்பு, சமையல் எண்ணெயை தொடர்ந்து வெங்காயம் விலை உயர்ந்ததால் நடுத்தர, ஏழை மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் புதிய சட்டங்கள் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் தலைமை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசின் வேளாண் மசோதாவை ரத்து செய்யும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை புதிய சட்டத்தின் மூலம் மறுக்காமல் வழங்குவதற்கு வரைவு நகல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை சிறப்பு சட்டபேரவையை கூட்டி நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டது. அந்த மசோதாவுக்கு விவசாயிகள் உரிமை மற்றும் சிறப்பு பாதுகாப்பு மசோதா 2020 என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக பஞ்சாப் சட்ட பேரவையில் நான்கு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் கோதுமை, நெல் ஆகியவற்றின் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு கீழ் கொள்முதல் செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும், வேளாண் விளை பொருட்களை பதுக்குபவருக்கு தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதரவு விலை பாதுகாக்கப்பட்டுள்ளது. பஞ்சாவை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும், மாநில சட்டப்பேரவையில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா 2020, விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது.

இந்த சட்டத்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்கு இணையாக அல்லது கூடுதல் விலைக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் போடப்படுவது, விவசாயிகளை துன்புறுத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இந்த மசோதாக்களில் இடம் பெற்றுள்ளன. சத்திஸ்கர் மாநில சட்டபேரவையில் விரைவில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, விவசாயம் சம்பந்தப்பட்ட மாநில உரிமைகளை பெற பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள மசோதாக்களை போல தமிழகம் அரசும் உடனடியாக சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்கங்கள் கூறுகையில், ‘‘மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வலு சேர்க்கும் சட்டம். ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு அடிமைகள் போல் விவசாயிகள் வேலை செய்யும் நிலை ஏற்படும். எனவே விவசாயி என கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜஸ்தான், பஞ்சாபை போல் தமிழக சட்டப்பேரவை உடனே கூட்டி, வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக புதிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு: கரும்பு சட்டத்தில் விவசாயிகள் ஆலைக்கு கரும்ைப சப்ளை செய்த 14 நாட்களில் அதற்கான பணத்தை ஆலை பட்டுவாடா செய்ய வேண்டும்.

அப்படி இல்லை என்றால் அந்த ஆலையை ஏலமிட்டு பணத்தை கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் கரும்பு நிலுவை தொகையை 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலைகள் வழங்காமல் உள்ளது. இதுபற்றி அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதுள்ள வேளாண் சட்டத்தால் கார்ப்பரேட்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றினால் கோர்ட்டுக்கு போக முடியாது, கிரிமினல் வழக்கு தொடர முடியாது. மாறாக கலெக்டர், ஆர்டிஓவை தான் அணுக வேண்டும். கரும்புக்கே பதில்லை. எனவே புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். மாநில அரசு அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பது நியாயமற்றது. அதிகாரத்தை தக்க வைக்க மாநில அரசு போராட வேண்டும்.

விவசாயிகளை நசுக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உடனே சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் சட்டமன்ற முன் போராட்டம் நடத்துவோம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன்: தமிழக சட்டசபையில், கடந்தாண்டு ஒப்பந்த சாகுபடி திட்டம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதை இன்னும் அமல்படுத்தவில்லை. அதில் விவசாயிகளுக்கு என்னென்ன சாராம்சம் உள்ளது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவகுமார்: தமிழக முதல்வர் விவசாயி என்று மட்டும் சொல்லிக்கொள்கிறார். ஆனால் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் கொண்டு வந்த மத்திய அரசுக்கு துணை போகிறார். ஒரு காலத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக அரசு விளங்கியது.

ஆனால் இப்போது மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. எம்ஜிஆர் மாநில உரிமைகளுக்காக ராணுவத்தை எதிர்த்தவர். மாநிலத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற எடப்பாடி அரசு மறுக்கிறது. முன்னோடியாக இல்லாவிட்டாலும், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை போன்று தமிழகத்திலும் வேளாண் சட்டத்துக்கு எதிராக புதிய சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற முயற்சிக்காவிட்டால் முதல்வர் எடப்பாடி தீராத பழிசொல்லுக்கு ஆளாக நேரிடும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாசிலாமணி: வேளாண் துறை என்பது மாநில அரசு பட்டியலில் இருந்து வருகிறது. அந்தந்த மாநிலத்தில் சட்டமன்றத்தில் விவாதிக்காமல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது கண்டனத்துக்குரியது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான பயிர் சாகுபடி மற்றும் இயற்கை தொடர்பான பாதிப்பு இருந்து வருகிறது. மத்திய அரசு அடாவடி தனமாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதுடன் மவுனமாக உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான் போன்று தமிழக அரசும் சட்டமன்றத்தை உடனே கூட்டி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க புதிய சட்ட மசோதாவை நிறைவேண்டும்.

கரும்பு சட்டத்தில் விவசாயிகள் ஆலைக்கு கரும்ைப சப்ளை செய்த 14 நாட்களில் அதற்கான பணத்தை ஆலைபட்டுவாடா செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த ஆலையை ஏலமிட்டு பணத்தை கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், இதுவரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதுள்ள வேளாண் சட்டத்தால் கார்ப்பரேட்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றினால் கோர்ட்டுக்கு போக முடியாது, கிரிமினல் வழக்கு தொடர முடியாது

Related Stories:

>