யானையை கொன்ற விவசாயி கைது

தேன்கனிக்கோட்டை: தளி அருகே யானையை சுட்டுக்கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே ஜவளகிரி வனச்சரகம் சென்னமாலம் கிராமம் அருகே நேற்று முன்தினம் அகழியில் 8 முதல் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. தகவலறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானையின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். வனத்துறை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் குண்டடிபட்டு யானை உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜவளகிரி வனத்துறையினர் வனஉயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து யானையை சுட்டுக்கொன்றவர் குறித்து, 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், சென்னமாலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துமல்லேஷ்(40) என்பவர் யானையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, முத்துமல்லேஷை நேற்று கைது செய்த வனத்துறையினர்  அவரிடமிருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அடிக்கடி விவசாய நிலத்திற்குள் வந்து பயிர்களை நாசம் செய்ததால் யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>