×

ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களை தொடர்ந்து டெல்லியிலும் பட்டாசுகளுக்கு தடை..!! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: காற்று மாசு, கொரோனா பாதிப்பு சூழலை கருதி டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நிலவும் கொரோனா வைரஸ் நிலவரத்தை தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இன்று அவர் ஆய்வு செய்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக பட்டாசுகள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்வதாக, ஏற்கனவே, ராஜஸ்தான், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்கள் அறிவித்தன.

தற்போது, டெல்லி அதே வழியை கையில் எடுத்துள்ளது. பண்டிகை காலம் மற்றும் மாசுபாடு காரணமாக கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரித்துள்ளன. எனவே இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது, டெல்லியில் பட்டாசுகளை தடை செய்யவும், மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். டெல்லி கடந்த சில நாட்களாக கொரோனா கேஸ்களின் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக தினசரி கொரோனா நோயாளி எண்ணிக்கை 6,000 ஐ தாண்டியுள்ளது.

முன்னதாக, கெஜ்ரிவால் டெல்லி மக்களை பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும், லட்சுமி பூஜையை மெய்நிகர் வழியில் கொண்டாட தன்னுடன் இணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பல மாநிலங்களும் பட்டாசுக்கு தடை விதிப்பதால், சிவகாசியில் பட்டாசுத் தொழிலை நம்பியுள்ளோர் நிலைமை என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், கொரோனா காலத்தில் நுரையீரல் பாதிப்பு நோயாளிகளுக்கு மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிட கூடாது என்பதாலும், பட்டாசுக்கு தடை விதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Tags : Firecrackers ,Arvind Kejriwal ,Delhi ,Rajasthan ,Odisha Announcement , Firecrackers banned in Delhi following Rajasthan and Odisha Announcement by Chief Minister Arvind Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...