×

அறந்தாங்கி வழியாக காரைக்குடியிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்: பயணிகள் கோரிக்கை

அறந்தாங்கி: காரைக்குடியில் இருந்து சென்னைக்கு அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்களும் ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மா(தற்போதைய மியான்மர்) நாட்டில் காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பெரிய அளவில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் பொருள்களை கொண்டு செல்லவும், ஊர் வந்து சேரவும் தங்கள் பகுதிக்கு சென்னையில் இருந்து ரயில் வசதி செய்து தருமாறு ஆங்கிலேய அரசை வலியுறுத்தினர். நாட்டுக்கோட்டை நகரத்தாரின் தீவிர முயற்சியின் பலனாக ஆங்கிலேய அரசின் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூருக்கு மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் கடந்த 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாணவ, மாணவியர் சென்று படித்து வந்தனர். இந்த நிலையில் நாடு முழுதும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகலரயில் பாதைகளாக மாற்றம் செய்யப்பட்டன.

இதேப்போல இந்த வழித்தடத்தில் காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பு+ண்டி இடையே 187 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகலரயில்பாதையாக மாற்ற ரூ.1700 நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. இதனால் 1902-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ந் தேதி முதல் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கிய ரயில், 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. 2012- ஆம் ஆண்டு முதல் கட்டமாக காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. பணி தொடங்கி சில ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளால் அகலரயில் பாதை அமைக்கும் பணி தாமதமானது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே அகலரயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த பாதையில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே 225 சிறிய பாலங்கள், 14 பெரிய பாலங்கள், கண்டனூர், பெரியகோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, ஒட்டங்காடு, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலைய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே அமைக்கப்பட்டுள்ள அகலரயில் பாதை பணிகளை கடந்த ஆண்டு தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வை மேற்கொண்டார். ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு முடிவு திருப்திகரமாக இருந்ததால், கடந்த ஆண்டு தெற்கு ரயில்வே சார்பில் திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு டெமு ரயில் சேவை தொடங்கப்பட்டது. வாரத்திற்கு 3 நாட்கள் இந்த டெமு ரயில்கள் இயக்கப்பட்டன. டெமு ரயில்கள் இயக்கப்பட்டபோது, ரயில்வே கேட் கீப்பர்கள் பற்றாக்குறை காரணமாக ரயிலில் செல்லும் பணியாளர்களே ரயில்வே கேட்டை மூடுவது, பின்னர் திறப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதனால் ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தாமதமாவே சென்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் கேட்கீப்பர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதையில் புதிய ரயில்கள் இயக்கப்படும் என இந்த பகுதி மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு வரவில்லை.

இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் சென்னை தாம்பரத்தில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக செங்கோட்டை வரை வாரத்திற்கு 3 நாட்கள் இயங்கக்கூடிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலை அடுத்து நாடு முழுதும் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டதால், தாம்பரம்-செங்கோட்டைக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது நாடு முழுதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தாம்பரத்தில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை,அறந்தாங்கி, காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கும், ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயில்களை இயுக்க வேண்டும் எனஇப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

Tags : Karaikudi ,Chennai ,Aranthangi , Aranthangi, Karaikudi, Rail
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!