×

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் நாசம்: மாடுகளுக்கு இரையாகும் மக்காச்சோளம்

சின்னாளபட்டி: ஆத்தூர் ஒன்றியத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் மற்றும் மழையின்றி 2 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் அழிந்து வருகின்றன. எனவே விவசாயிகள் பயிர்களை மாடுகள் மேயவிடுகின்றனர். ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வக்கம்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஆடி மாதம் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் மக்காச்சோளம் பயிரை விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். இவை நன்கு வளர்ந்து கதிர்விட்டு வளர்ந்து வரும் நிலையில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஆரம்பித்தது. பல தோட்டங்களில் மக்காச்சோள பயிர் கருகி வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சரிவர மழை இல்லாததால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர் சாவியாக (பதராக) மாறிவிட்டது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து எஸ்.பாறைப்பட்டி விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘நான் 30 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தேன். ஏக்கருக்கு விதை உரம், களைக்கொல்லி மருந்து உட்பட ரூ.35 ஆயிரம் செலவு செய்து நடவு செய்திருந்தேன். மக்காச்சோளம் வளர்ந்து வரும் போது அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்து புழுவை கட்டுப்படுத்திய நிலையில் இப்போது மழையின்றி எல்லாம் சாவியாக மாறிவிட்டது. மழை பெய்தால் கூட காப்பாற்ற முடியாது. அதனால் தோட்டங்களில் மாடுகளை வைத்து மேயவிட்டு வருகிறோம்’’ என்றார்.

அக்கரைப்பட்டி விவசாயி முத்துக்கண்ணன் கூறுகையில், ‘‘ஒவ்வொரு முறையும் மக்காச்சோளம் பயிரிடும் போதெல்லாம் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்படுகிறது. இது வேளாண் துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? இதுநாள் வரை மக்காச்சோளம் பயிரிட்ட தோட்டங்களுக்கு ஒரு வேளாண் துறை அதிகாரி கூட பார்வையிட்டது கிடையாது. பிறகு நாங்கள் எப்படி பயிர்களை காப்பாற்றி உயிர் வாழ முடியும்’’ என்றார்.

எஸ்.பாறைப்பட்டி விவசாயி மாயப்பன் கூறுகையில், ‘‘வேளாண் துறை அதிகாரிகள் எங்களது தோட்டத்திற்கு வருவது கிடையாது. பயிர்கள் எல்லாம் பதராகி போய்விட்டது. இதே நிலை நீடித்தால் அடுத்தமுறை உழவு ஓட்டகூட இப்பகுதி விவசாயிகளிடம் ஒரு பைசா கூட இருக்காது’’ என்றார்.

Tags : worm attack ,American , Creative worm, corn
× RELATED தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை