×

5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயனில்லை: சோழபுரம்- மகாராஜபுரம் இடையே சேதமடைந்த மண்ணியாற்று பாலம் சீரமைக்கப்படுமா?

கும்பகோணம்: ஐந்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சோழபுரம்- மகாராஜபுரம் இடையே சேதமடைந்த மண்ணியாற்று பாலம் சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே சோழபுரம்- மகாராஜபுரம் இடையே பழமையான மண்ணியாற்று பாலம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையால் இப்பாலம் 36 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பாலம் சோழபுரத்தில் இருந்து மகாராஜபுரம், மணல்மேடு, பணங்குடம், அய்யாநல்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நகர்புறத்துக்கு வரும் இணைப்பு பாலமாக இருந்து வருகிறது.

இப்பாலத்தின் பெரும்பகுதி 2015ம் ஆண்டு பெய்த கனமழை வெள்ள பெருக்கின்போது சேதமடைந்தது. தற்போது பாலத்தின் இருபுறமும் கைப்பிடிகள் சேதமடைந்துள்ளது. அதேபோல் பாலத்தில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

தற்பொழுது ஆற்றில் தண்ணீர் செல்வதால் இருபுறமும் கைப்பிடி சுவர் உடைந்துள்ளதால் வாகனம் மற்றும் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைய வாய்ப்புள்ளது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைகாலம் நெருங்கி வருவதால் ஆற்றில் நீர்வரத்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் இந்த பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Maharajpuram ,Cholapuram , Kumbakonam, Bridge
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!