×

மழை வெள்ளத்துக்கு சேதமாகி 4 மாதம் ஆகியும் சீரமைக்கப்படாத பாலங்கள்

கூடலூர்: கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மே மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள், விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.

மங்குழி, புறமணவயல், முதல் மைல், துப்புகுட்டி பேட்டை, புளியம் பாறை உள்ளிட்ட இடங்களில் சிறிய பாலங்கள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் தற்காலிக பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லவும், ஆட்டோ உள்ளிட்ட சிறிய வாகனங்கள் செல்லவும் வழி ஏற்படுத்தப்பட்டது. பாலங்கள் சேதமடைந்து 4 மாதம் ஆகியும் இவற்றை சீரமைக்கும் பணி இன்னும் துவக்கப்படவில்லை. மங்குழி பகுதியில் உள்ள பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.

முதல் மைல் கோல்டன் அவென்யூ பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஓடையின் குறுக்கே உள்ள துண்டிக்கப்பட்ட பாலத்தை தற்காலிக சீரமைப்பு பணிகள் கூட செய்யவில்லை. இதனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

இதேபோல், துப்புகுட்டி பேட்டை பகுதியிலும் துண்டிக்கப்பட்ட பாலத்தின் மீது சீரமைப்பு பணிகள் அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டு சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. மழைக்காலம் முடிந்ததும் பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில் இதுவரை எந்த பணிகளும் துவங்கவில்லை. துண்டிக்கப்பட்ட பாலங்களை விரைவில் சீரமைக்கவும், வாகனங்கள் வசதியாக செல்ல பாலங்களை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bridges , Rain floods, bridges
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...